வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 16

ப்ரேம பிரபாவின் அடுத்த கவிதை...

"உதட்டு ரேகை முத்தங்கள்".

இந்தத் தலைப்பே எனக்குள் சில கேள்விகளை எழுப்பிய படி இருந்தது. அதென்ன உதட்டு ரேகை முத்தம். உதட்டில் ரேகை எங்கே இருக்கிறது...
ரேகை என்பதை "வழி" எனப் பொருள் கொண்டாலும்...
முத்தம் தருவது இதழ்கள்தானே...பின் எதற்காக
உதட்டு ரேகை முத்தம்.

யோசித்ததில்...கவிஞரின் ஆளுமை எனக்குப் புலப்பட்டது.
இதழ்கள் பேசுவதில்லை. வெறும் உணர்வுகளோடு சரி...புன் முறுவலோ...பழிப்போ..அத்துடன் நிறுத்திக் கொள்கின்றன. ஆனால் உதடுகள் பேசுகின்றன. உள்ளத்தின் உணர்வுகளை...சப்தங்களாக்குகின்றன. இந்த உதடுகள் எப்போதும் சப்தங்களை மென்று கொண்டிருக்கும் மௌனங்கள். ப்ரேம பிரபாவின்..."உதட்டு ரேகை முத்தம்"...வெற்றியின் மகிழ்ச்சியில்...அதன் தனிமையில்... கோப்பையோடு...வீரன் பகிர்ந்துகொண்ட உணர்வுகளின் சப்தம்....இந்த முத்தம்.

வெற்றி...வெறும் மூன்றெழுத்துத்தான். ஆனால்...
அது நிகழ்த்தும் மாற்றங்கள்...ஒரு வாழ்நாளுக்கானது. ஒரு சாதாரணமானவனை...
சாதனையாளனாக்கி விடும் கணம் அது.
ப்ரேம பிரபாவின் சாதனையாளன் அந்தக் கணத்தில்...தன் வெற்றிக்காகக் கடந்து வந்த நாட்கள், இழப்புக்கள்...உறவின் வலிகள்...எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கிறான். தனக்குப் பின்னால் நின்ற...உலகம் அறியாத பல உறவுகளின் அன்பை நினைத்தபடி
அவர்களுக்காக...வெற்றிக் கோப்பையில் தன்
உள்ளத்தின் முத்தத்தைப் பதிக்கிறான் அந்தச் சாதனையாளன்.

அவனின் அந்தக் கனத்த உணர்வை...
இந்த வார்த்தைகளால் பதிவு செய்திருக்கிறார் ப்ரேம பிரபா.

".....என் பாசமான
குடும்ப அங்கத்தினர்களின்
இனிமையான இழப்புக்களை
எல்லாம் இந்த வெற்றியால்....
முழுவதுமாக என்னால்
மீட்டுக் கொடுக்க முடியாது....."

இந்தக் கவிதை எனக்கு இன்னுமொரு மகத்தான தருணத்தை நினைவுக்கு எடுத்து வந்தது.
அது..."பாரத ரத்னா" சச்சின் டெண்டுல்கர்
வான்கடே மைதானத்தில் நிகழ்த்திய ..farewell (பிரிவுபசார) உரை.

கிரிக்கெட் என்ற விளையாட்டை...நாளைக்குப் பின் வரும் தலைமுறையில் டெண்டுல்கரை விடக் கூட யாராவது பிரமாதமாக ஆடி விடக் கூடும்.
ஆனால்... அன்று கூடி இருந்தவர்களுக்காக அவர் நிகழ்த்திய மகத்தான உரைதான்...அவரை இந்தியா
என்றென்றைக்கும் விளையாட்டின் பாரத ரத்னா..
வாகக் கொண்டாடிக் கொண்டே இருக்கும்.

ஒருவரையும் மறக்கவில்லை அவர். எல்லோரையும்...மாதா, பிதா...குரு...தெய்வம்..
உற்றம்...சுற்றம்...ரசிகர்கள்..என எல்லோரையும்
தன் வெற்றிக்கான பங்களிப்பாக்கினார். தன் மனைவி, அண்ணன்...எனத் தனக்காக...தன்னலங்களை விட்டுக் கொடுத்தோருக்கு ...இதய பூர்வமாக நன்றி சொன்னார். தன்னை மிகவும் miss பண்ணிய தன்
குழந்தைகளிடம் மன்னிப்புக் கோரினார்.
வெற்றியின் விலை என்ன என்பதை அழகாகச் சொன்ன அவர் ஒரு தேசத்தைப் பெருமைப் படுத்துபவன்...குடும்ப உறவுகளில் இழக்க வேண்டியிருப்பதை நினைவு கூர்ந்தார்.

விளையாட்டின் மகத்தான கணங்களுக்காக...
தன்னைப் போலவே...தன் குடும்பமும் இழக்க நேர்ந்திருக்கும் விஷயங்களை (அவர் அப்பாவின்
மரணத்திற்கு மறு நாளே...உலகக் கோப்பை போட்டித் தொடரில் கலந்து கொண்டவர் அவர்)
இந்த உலகத்தின் பார்வைக்கு வைத்தார்.
வருத்தத்தோடு அல்ல. நிதர்சனங்கள்...விமர்சகர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிடிபடுவதற்காக.

ஒரு வெற்றிக் கோப்பையின் மேல் வைக்கப் படும் முத்தம்...
தேசத்திற்கான கௌரவம். ஆனால்...அதைக் கோப்பையின் மேல் பதிப்பவனின் மன உணர்வுகளை...
எளிய வார்த்தைகளில் சொன்ன...ப்ரேம பிரபாவின் கவிதைக்கு நன்றி சொல்லி...

மீண்டும் வருவேன்...காலத்தின் பெரும் துணையோடு.

எழுதியவர் : rameshalam (12-Apr-14, 3:42 pm)
பார்வை : 64

மேலே