கடைக்குப் போன மச்சான்

காய்கறி வாங்கக் கடைக்குப் போன மச்சான்
கதிகலங்கிப் போயித் திகைச்சு நின்னான்

காய்கறி வாங்க அவன் நெனச்சதில்லே
கனா கூட இதுவரைக்கும் கண்டதில்லே

ஆயாசம் அடிக்கடி வருதுன்னு
நோயாளியாப் போனான் வைத்தியரத் தேடி .

சூப்பு வச்சு குடிச்சா சரியாப் போகுமின்னு
சொல்லிப் போட்டாரய்யா வைத்தியரய்யா.

சூப்புக்குக் காய் வாங்கப் போன மச்சான்
துவண்டு போனான் வெலையக் கேட்டு.

வெங்காயம் வெல மட்டும் நூறு ரூவாயாம்
வெல சொல்ல பீசு மட்டும் பத்து ரூவாயாம்

சொத்தையில்லாத கத்தரிக்கா வேணுமின்னா
சொத்தையெல்லாம் வித்துப்புட்டுப் போகணுமாம்.

கம்மலை அடகு வச்சு மகராசிங்க
காரட்டு வாங்கிக்கிட்டுப் போனாங்க

மூக்குத்திய வித்துட்டு வந்த புள்ளத்தாச்சிக்கு
முள்ளங்கிப் பத்த மட்டுந்தான் அகப்பட்டுச்சு.

பச்சைப் பட்டாணி பாக்கட்டுக்குக் காவலா
பக்கத்துலயே நிக்கிறான் போலீசுக்காரன்

எடை போட்டுக் குடுத்த பழக்கமெல்லாம்
எப்பவோ மலையேறிப் போயிருச்சாம்

ஒத்த தக்காளியோட வெல மட்டும்
ஒம்போது ரூவாய்னு சொன்னாக.

பூண்டு வெல கேட்டுப் போனவுக
பூதம் அடிச்சாப்ல வந்தாக

எல்லா வெலயையும் கேட்டுப்புட்டு
என்னமோ பண்ணுதுன்னு சொன்ன மச்சான்

மண்டை கிறுகிறுத்து மயங்கிப் போயி
மந்தையிலே விழுந்தான் குப்புறடிச்சு.

தண்ணி தெளிச்சு எழுப்பி விட்ட ஒரு பெரிசு
தன்மையா சொல்லிச்சு அவன் காதுக்குள்ள

“பலகீனம் மட்டும்தாம்பா ஒன்னோட வியாதி
பயப்படாதே , காய் கறி துன்னு, சரியாப் போகும்.”

திரும்பவும் மயக்கம் போட்டு விழுந்தான் மச்சான்
தெளியறதுக்கு யாராச்சும் வழி சொல்லுங்கோ .

எழுதியவர் : விநாயகபாரதி.மு (15-Apr-14, 12:17 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 36

மேலே