சிறப்புக் கவிதை 2 புலமி அம்பிகா
அந்தகாரத்தில் விடியாச் சூரியன்
புயலின் நுனியிட்ட
கோலத்தின் புள்ளிகளை
யாரறிவார்
நீயென்பது கானல்நீர்
மழைநீராவது சாத்தியமல்ல
நானறிந்த போது
தலைகுனியும் காத்திருப்பிற்கு
வாழ்த்துரை வாசிப்பு
ஒட்டாத உதடுகளின்
உச்சரிப்பில்
நாடிபிடித்துக் கௌரவிக்கிறது
புத்தம் பூத்திராத
பூமியினைக் கண்டிராது
போகவில்லை
இந்தக் கால ஓட்டமும்
போதியின்
வேரறுத்துப் .போனவனின்
நிழலில் நான்
வெளிச்சத்தில்
துடித்துக்கொண்டிருக்கும்
விண்மீன் அறிவார் யாரோ ?!
அது இரவின்
மேடையில் அலங்காரமாகிய
அலங்கோலம்
குளம் நிறுத்திப்
பூக்கும் தாமரையின்
முகத்தில் வியர்வைத் துளிகள்
தொட்டாலும் - நீ
தொடமுடியா உயரத்தில்
வாழ்வொன்றைத்
திரித்துத் திரியாக்கி
அர்பணிக்கின்றேன் அகலே
உன் மௌனத்தின்
ஒளியாவதில்
பிரகாசித்துப் போகின்றேன்
பொலிவு
குறையவில்லை - என்
ரேகைகளுக்கு
ஒளிவு மறைவுமில்லை - இனி
பேனா முனைகளுடன்
போரிட்டுப் பார்
உன் மிருகத்துள்
தலைகொடுத்தவள்
மரணத்தின் நியாயத்திற்குப்
பின்புலமாய்
கடவுளிருப்பதை யூகித்துத்
தலைதப்பி
மனிதம் புகுந்தேன்
இதயமற்றவன்
விழியமர்ந்த பறவைகளுக்கு
இமைகளின் சலசலப்பு
பறந்தன - என் நினைவுகளோடு
திணறும்
மூச்சுக் குமிழ்களோடு ....
அதோ வானம் முடிவுற்றது
காதலை முறித்துக்
கண்டுவிட்டான் சுயம்வரம்
நோக்குதலின்றித்
திரும்பும் நோக்கமுடையவன்
துயிலுறா அம்பறாத்தூணி
முதுகுடையவன்
அந்தகாரத்தில்
விடியாச் சூரியனுமவன்
எந்த நேரத்திலும்
நான் நின்ற பாதியுமவன்
என் அந்தத்தின்
முன்னெடுத்த ஆதியுமவன்
கோடைக்குள்
திசைவிரியும் காற்றலைகளோடு
பண்டமாற்று
தோற்பதிலும் சுகமில்லை
வெல்வதிலும் சுகமில்லை
துறவில் காவியுடுத்தக்
கண்டேன் காதலை ,
பொய்யாகிப் போனதிலே சுகம் !
(பொதுவாக காதல் கவிதைகளை நான் ஊக்குவிப்பதில்லை .அன்றியும் சிறப்பான சொல்லாடலுக்காக இப்போது பதிகிறேன் இக்கவிதை )