கதை சொல்லும் கதவுகள் Mano Red
இது வெறும் கவிதை அல்ல
கதவுகளின் நாட்குறிப்புகள்...!!
ஒருவேளை காதுகள் இருந்து
ரகசியங்கள் அறிந்தாலும்,
தான் கொண்ட வீட்டுக்கு
துரோகம் செய்யாமல்
குடும்ப மானம் காக்கும்
கடவுள்கள் தான் கதவுகள்...!!
அம்மாக்கள் அடிக்கும் போதெல்லாம்
அரவணைத்து ஆறுதல் சொல்லி
தன் பின்னே மறைய இடம் கொடுப்பது
சேலை கட்டாத கதவுகள் மட்டுமே...!!
எப்போதும் ஏறி விளையாட
அனுமதிக்கும் கதவுகள் தான்
தாத்தாவிடம் அதிகமாய்
திட்டு வாங்கிய கதவுகள்...!!
முன்வாசல் கதவுகளை விட
மச்சு வீட்டு கதவுகளுக்கு தான்
திமிரு அதிகமிருக்கும்,
யார் வந்தாலும் தலை குனியாமல்
உள் நுழைய விடுவதில்லை....!!
தேய்ந்து போன கதவுகளுக்கும்,
துருப்பிடித்த கதவுகளுக்கும்
வயதாகி விட்டது என்பதை
திறக்கும் சத்தமே
உரக்க காட்டிக் கொடுக்கும்...!!
கதவுகள் வெறும் மரம் மட்டுமல்ல
மனித வாழ்க்கையின் பதிவுகளை
தனியே சுமக்கும்
தாழ் பூட்டிய மனம்..!!