இறைவனும் மனிதனும்
அம்புலி தன் நிலை கடந்து செல்ல
பகலவன் பவளமாய் பவனி வருகிறான் – சூர்யோதயம்
வெம்மை பெற்ற வளியில் நீராவி
தண்மை பெற்று தாவரத்தில் உறையும் – பனித்துளி
மலைகளில் ஜனனித்து தலைகீழ் வீழ்ந்தும்
அலையாழி தேடி ஓடி விடும் – நீர்வீழ்ச்சி
உதட்டு வழியல்லால் தன்னங்கம் குழுங்க
அகத்து வழி காட்டி விடும் - மழலை சிரிப்பு
தீண்டி விடத் தூண்ட வைக்கும் ஓராயிரம்
வர்ணங்கள் போர்த்திய சுகந்தம் – மலர்கள்
வான் பிளந்து மண் மோதிய தன்
வாசம் தந்தே சுவாசம் கலக்கும் – மண்வாசனை
பார்க்க பார்க்க சலியாத
பார்வை விட்டு அகலாத
இயற்கைதனை படைத்து விட்ட
இறைவன் எங்கே மனிதனிடம் கேட்டேன்!
செங்குருதி கொண்ட மனிதன் தோல்
நிறங்கருதி வேற்று கின்றான் – இனவெறி
படைத்தவன் எங்கோ மறைந்திருக்க அவன்
பெயரில் தினமொரு குருஷேத்ரம் – மதக்கலவரம்
மனித அசுரர்களின் உடல் வேள்விக்கு
அவியாகும் தங்க மங்கையர் – கற்பழிப்பு
பிறர்நலம் பேணிவிடும் வாக்குறுதி தந்துவிட்டு
தன்னலம் காத்திடவே பதவியேற்பு – ஊழல்கள்
தூயமனம் தொலைந்து போக வஞ்சனைகள்
பாயவிட்டு துரோகங்களின் அரசாட்சி – பொய்மை
முப்போக விளைச்சல் கண்ட வயல்களெல்லாம்
சுகபோக வாழ்விற்கு போடப்பட்ட கூறுகளாய் - நகர்மய மாக்கல்
பார்க்க பார்க்க சலியாத
பார்வை விட்டு அகலாத
பாவங்களில் தொலைந்து விட்ட
மனிதம் எங்கே இறைவனிடம் கேட்கிறேன்!!!!!