ஒப்பற்ற தலைவர் காமராஜர்
காமராஜர்
ஏழைமக்கள் இல்லத்தில் இறைவனானாய் ...
எழில்தவழ உள்ளத்தில் உவகையானாய் ...
ஏழைகளும் வாழ்ந்திடவே எவரும் செய்யா
ஏற்றமிகு சீர்திருத்தம் நீயே கண்டாய் ...!
பேழைநிறை செல்வத்தைப் பெற்றால் கூட
பிறர்க்கே பகிர்ந்தளிக்கும் உள்ளம் பெற்றாய் ...!
நல்லவை நாட்டில் நிறைந்த காலம் ...!
அல்லவை நாட்டில் அழிந்த காலம் ...!
கல்வியும் செல்வமும் பெருக்கு எடுத்தே
கங்கை எங்கும் ஓடிட கண்டோமே ...!
குடல்புரட்டும் குலக்கல்வி பாய்ந்த போது ...
குழந்தையினம் கொடுந்தீயில் சாய்ந்த போது ...
உடலாட ஓர் பெரியார் உரக்கக்கூவி
உறைவாளை எடுத்திடுக என்றபோது ...
கடல் போல ஆர்ப்பரித்தார் காமராஜர் ...!
கள்ளிப் பாலாய்க் கசந்த
விடமதனை விரட்டிடவே விரைந்த அவர் ....
உறைந்திட்டார் வரலாற்றின் ஊருக்குள்ளே ...!
சத்துணவு அளிப்பதற்கு நிதியில்லை யென்றபோது
“ பிச்சை எடுப்பேன் ” என்றுரைத்த நீ
பச்சைத் தமிழன் மட்டுமல்ல – வாழ்வில்
இச்சை இல்லாத் தமிழன் கூட ...!
சுடுகாட்டுக் கூரையில் ஊழலாம் ...!
சூதான அரசியல் சூழலிலும்
கறைபடியா வாழ்வினைக் காட்டியவன் ...!
கர்மவீரராய்த் தனிப்புகழை நாட்டியவன் ...!
அரசாங்க வீட்டை அடையநினையா மேதை !
கறைபடியா வாழ்வைக் கடைப்பிடித்த தாதை !
துறைதோறும் தூய்மை தனையே காத்தவன் !
குறைகளைக் களைந்திடவே குவலயத்தில் பூத்தவன் !
அரசியல் தேரின் அச்சு முறிந்திடாமல்
ஆரவார அரசியல் புரிந்திடாமல் - அரசியல்
தேரோட்ட வந்த தென்பாண்டி சிங்கம் ...!
பாராட்டுப் பரவட்டும் பாரில் எங்கும் ...! .
ஒன்பது ஆண்டு காலம்
உண்மையில் அது ஒரு பொற்காலம் ...!
இன் முகத்தோடே தொண்டர்
இனிதுரை கேட்ட ஞாலம் ...!
மன்னவா ! நீ இறந்தாயா
மறுபடியும் வா ! மாசற்ற அரசியலைத்தா ...!