ஒட்டு வேட்டை
சூரிய ஒளி புகாத
அடர் வனமொன்றில்
உன் நினைவுகளில்லாத
இடம் தேடிச் செல்கிறேன்!
திசையறியா வழியொன்றில்
தொலைந்து விடப்
பார்க்கிறேன்!
ஆனால் உன் நினைவுகள்
நகர விடாமால் சுற்றி சுற்றி
ஒலிபெருக்கிப் பெட்டிகளைக்
கட்டிக் கொண்டு ஒட்டு
வேட்டையாடும் வேட்பாளரின்
குரல் போல் காதுகளுக்குள்
புகுந்து கொண்டு
அடிவயிறு வரை சென்று
அன்பு வேட்டையாடுகிறது!
என் நினைவு முற்றங்களில்
நீ தெளித்துச் சென்ற
வாக்குறுதிகள் ஒவ்வொன்றும்
என் மனதில் ஆழ வேர்விட்டு
தல விருட்சம் போல்
விஸ்தாரமாய் வளர்ந்து விட்ட
ஆலமரத்தின் விழுதுகள் போல்
தலை கீழாய் தொங்குகிறது!
உன் அரிதாரம் பூசப் பட்ட
அஸ்திரங்கள்
திருப்பூர் சாயப் பட்டறைகளில்
சாயமெற்றப் பட்ட
கட்சிக் கொடிகளாய் தோன்றுகின்றன
என் கண்களுக்கு!
இன்று நாளை மறுநாளென
காத்திருப்பில் கழிகிறதென் நாட்கள்!
நிறைவேறாமல் போன
நப்பாசைகளுடன் காத்திருக்கும்
சாதாரண வாக்காளன்
போல் நிராசைகளுடன்!
காத்திருக்கிறதுஎன் மனம் !
உனது எண்ணங்கள் என் மனதில்
வண்ண ரங்கோலி போல்
காட்சி தருகிறது அழகழகான
கட்சி சின்னங்களாய்!
உழுத்துப் போன வார்த்தைகளும்
உறுதியற்ற திட்டங்களும்
கேட்டுக் கேட்டு புண்ணாகிப்
போயின என் காதுகள்!
உன் பொய்வாக்குறுதிப்
பிரச்சாரங்கள் ஓய்ந்தபாடுமில்லை!
என் பிரச்சனைகள்
தீர்ந்த பாடுமில்லை!
....................சஹானா தாஸ்!