கணக்கு
நாம் போடும் மனக் கணக்கில்
நினைத்தபடி விடைகளில்லை
அவன் போடும் விதிக் கணக்கில்
விடைகள் என்றும் புரிவதில்லை !
தெரியாத வினாக்களுக்கு
தினந்தோறும் தேர்வெழுதி
விடை காணக் காத்திருந்தால்
போட்டிடுவான் புதுக் கணக்கு !
தொடருமென்று நினைத்திருப்போம்
முடிந்து விடும் சில கணக்கு
முடிந்ததென்று நினைத்திருப்போம்
தொடர்ந்து விடும் மறுக் கணக்கு !
அக்கணக்கு இக்கணக்கு
எக்கணக்கு எதுவாகிலும்
பணக் கணக்கில் ஆரம்பித்து
பிணக் கணக்கில் முடிந்து விடும் !
நொடிக் கணக்கில் உருவாகி
மாதக் கணக்கில் கருவாகி
வருடக் கணக்காய் வாழ்ந்திருந்தும்
தெரிவதில்லை அவன் கணக்கு .