வாக்காள குருவிகளே-----அஹமது அலி----

வாக்காள குருவிகளே!
~~~~~~~~~~~~~~~~~~~~~

வாக்குகள் கேட்டு வந்துள்ளோம்
வாக்களிக்க வேண்டுகிறோம்
கத்தியே நமது வெற்றிச் சின்னம்
சத்தியமாய் உங்கள் கழுத்துக்கு வராது
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//
வேடர்களின் வேந்தன் நம் தலைவர்
வேடந்தாங்களும் நாளை நமதே
வேட்டையாடுதலை மறந்து விட்டோம்
வெற்றிக்கு வாக்களியுங்கள்
நம்புங்கள் ! வாக்களியுங்கள்!
//
காடுகளை பட்டா போடுவோம்
தலைவரின் பெயரில் நாமே
குளுகுளு வீடு கட்டித் தருவோம்
கூட்டைக் கலைப்பவர் நாங்கள் அல்ல
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//
இனபேதம் நிறபேதம்
இல்லாமல் இருப்பதெப்படி
இனவாத பயிற்சி அளிப்போம்
யாருடனும் எமக்கு பேதமில்லை
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//
சாதியும் மதமும் அரசியலின் கண்கள்
சாதிக்க இவை தான் நமக்கு துணைகள்
குருவிகளின் சாதியை கணக்கெடுப்போம்
மேலோர் கீழோரென்று பிரித்து வைப்போம்
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//

சிறகடிக்க வரிகள் விதிக்க மாட்டோம்
இறகு பிடுங்கி காது குடைவோம்
பசியெடுத்தால் இரையாக்குவோம்
எல்லாம் உங்கள் நன்மைக்கே
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//
அலைந்தலைந்த அசதி போக்க
அலைபேசி கோபுரங்கள் அமைப்போம்
சிறுபான்மை குருவிகள் மடியட்டும்
பெரும்பான்மை மகிழ்வே நம் சேவை
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//
நில நீர் வான் பங்கீட்டில்
பங்கீட்டு சண்டை பார்த்ததில்லை
பறவைகளே உங்களிடம்
பாகம் பிரித்து தந்து விடுவோம்
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//
அதிகாலை பறந்து அந்தி வரை
இரைதேட அவசியமில்லை
இலவச தானியங்கள் இல்லம் வரும்
இது சோம்பேறியாக்கும் முயற்சியில்லை
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//
ராஜ்ஜியமே எமது நோக்கு
ராஜ நாகங்களும் எமது கூட்டு
பயமின்றி போடுங்கள் ஓட்டு
பலனை காண்பது கண்கூடு
நம்புங்கள் ! வாக்களியுங்கள்!
//
காற்றலை வந்தாலும் கவலையற்க
கடலலை வந்தாலும் கவலையற்க
எக்கோடியிலும் எம் கோடி அலையடிக்கும்
அலையும் கொலையும் அறிய மாட்டோம்
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//
ஆளுங்கட்சியில் எதிர்கட்சி சதியென்போம்
எதிர்கட்சியில் ஆளுங்கட்சி சதியென்போம்
சாமர்த்தியம் மிக்கவர்கள் நாங்கள்
சம்பாத்தியம் பார்ப்பவர்கள் அல்ல
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//
வாக்காள குருவிகாள் கேளுங்கள்
வாக்குகளை மறவாமல் தாருங்கள்
உங்கள் வாக்கு பொன்னானது
எங்கள் வாக்கு மண்ணானது
நம்புங்கள் ! வாக்களியுங்கள்!
//
விடை பெருகிறோம் குருவிகாள்
விலங்குகளை சந்திக்க போகிறோம்
வெற்றியோ தோல்வியோ வெட்கமில்லை
ஐந்தாண்டு கழித்து மீண்டும் வருவோம்
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
///////////////////////////////////////////////////////////////////////////////
குருவிகளின் பதில்;

வேட்பாளர் வெளக்கெண்ணெய் போதுமய்யா
நாட்டை நாசமாக்கியது போதாதா உமக்கு
காட்டையும் நாசமாக்கிட வந்தீரோ
மூஞ்சில கக்கா போயிருவோம் ஓடுமய்யா..!
//////////////////////////////////////////////////////////////////////////////////





இந்தப் படைப்பின் கருவும் ஆலோசனையும் தோழர் நாகூர் கவி வழங்கியது. அவரின் ஆலோசனை படி சிறப்பாக என்னால் எழுத முடியவிட்டாலும். என்னால் முடிந்த அளவு முயற்சித்துள்ளேன். நன்றி நாகூர் கவி அவர்களே!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (21-Apr-14, 7:39 am)
பார்வை : 369

மேலே