நன்றியை நவில்கிறேன்

​ஓய்வு அவசியம் என்றார் மருத்துவர்
ஓய்வு என்பதால் ஒதுங்கியே உள்ளேன் !
ஓய்வு தேவையா ஓய்விலே வந்தவனுக்கு
ஓய்வே வேலைதானே என்றும் எனக்கு !

விருப்ப ஓய்வில் விரும்பியே வந்தவன்
விருப்பம் இன்றி ஓய்விலே உள்ளேன் !
விருப்பமே கணினியின் முன் அமர்ந்திட
விருப்பமே விரல்களுக்கு பணி அளித்திட !

தடையேது மனதின் விளையும் பயிருக்கு
தடையின்றி மலர்கிறது எண்ணப் பூக்கள் !
தடையேது எனக்கு தளத்தில் நடைபயில
தடையின்றி வலம் வந்தவனே எழுத்தில் !

மறுப்பவர் இருப்பர் வெறுப்பவர் இல்லை
மறப்பார் இல்லை மனங்களும் என்னை !
மறுப்பதும் மறப்பதும் மனிதனின் இயற்கை
மறுப்பவர் மாறுவதும் மண்ணில் நடப்பவை !

சொற்களை படிப்போர் சொல்வதை கேளீர்
சொற்களை வடிப்போர் சொல்லாடல் பாரீர் !
சொற்கள் பிறப்பதும் நினைப்பதை சொல்வதே
சொற்கள் வரிகளாகும் வரிகளும் வடிவமாகும் !

எண்ணங்களின் மாற்றம் எழுத்தில் தெரியும்
எண்ணங்களின் கோர்வை வரிகளில் புரியும் !
எண்ணங்களின் வண்ணம் வார்த்தை அறியும்
எண்ணங்களின் ஏக்கம் எழுத்தால் எரியும் !

அன்போடு அழைத்தனர் உடல்நலம் கேட்டிட
அன்போடு நண்பர்கள் அளவிலா நேசமுடன் !
அன்போடு பண்பும் நிறைந்திட்ட உள்ளங்கள்
அன்போடு அனுப்பினர் அஞ்சலும் தவறாமல் !

நன்றியை நவில்கிறேன் உள்ளதை பகிர்ந்தேன்
எழுதுவதை நானும் விரைவில் தொடர்வேன் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (21-Apr-14, 5:47 pm)
பார்வை : 563

மேலே