எழுத்தேந்திகள் - வினோதன்

அட்டை வேலிகள்
போர்த்திய - பட்டை
ஏடுகளின் கூடுகள்,
தின்று செரித்ததோ
சிலபல காடுகள் !

காலத்தை உண்ட
விடய கடத்திகள்,
எழுத்தை குடித்து
பழம் புதையலாகி
விலை வைத்து
விளைவிப்பது - நல்
கருத்துச் சுளைகள் !

தாயின் பாதத்தில்
வழிதேடும் மழலைபோல்
எழுத்தை - எடுத்தாண்ட
யாரோ ஒருவனின்
விழிகளின் வழிபுகுந்து
வீதிகாணும் விதிகொணரும்
மந்திரப் பறவையது !

நடுநிசியில் சிரித்தபடி
நடக்கவும் - கண்கதவோரம் கண்ணீர்
நாடவும் - மனதோரம் பூ
நடவும் தெரிந்த பெரும்பூவது
பெரும்பாலும் அரும் பூவது
பேரறிஞர்களின் விரலரும்புவது !

உலக மொழிகள் யாவும்
பெற்றுப் போடும்
ஞானக் கற்றைகள்,
மறுமொழிகளின்
தோன்றலுக்கு முன்னமே
தாயானது தமிழ் !

வாசிப்பதால் மட்டுமே
வாழ்பவர்களுக்காகவே - நம்
வாழ்வோடு - வசித்து வரும்
எழுத்தேந்திகள் - நம்
மூளை புகுந்து - நம்மை
சிந்திக்கத் தூண்டும்
சந்திகளின் சந்நிதியது !

முகத்துவாரத்தின்
முதுகிலோ - வேறு
கதவின் நெற்றியிலோ
விலை கண்டபின்னே
கரம் பிடிக்கிறோம் - அன்றி
மற்றவற்றை - கடையடியில்
வாழ வைக்கிறோம் !

வாசிக்க மறந்தவனின்
வானம் சன்னலாகிறது !
வாசிப்பை நேசிப்பவனின்
சன்னல் வானமாகிறது !
கிழிந்த சன்னல் மூடு
புத்தகம் திற - புரிதலின்
வானமும் பிறக்கட்டும் !

- வினோதன்

(உலக புத்தக தின வாழ்த்துக்கள்)

எழுதியவர் : வினோதன் (23-Apr-14, 8:29 pm)
பார்வை : 123

மேலே