ஒரு உயிரின் வலி
நிழல் களைந்து
நிஜம் புனைய ?
நீராடி
பூச்சூடி
பொட்டிட்டு
புடவைகட்டி
புதுபெண்ணாய்..
வந்து செல்லும்
வரனெல்லாம்
கண்டுசெல்ல
கொலுவின் பொம்மையாய்
வீற்றிருந்து
கனவுகள் மட்டுமே மிச்சமாய் ..
வந்தவர்கள்
சென்றார்கள் ..
ஆனால்
'சென்றவர்கள் '
?
நேரில் வந்தவர்களின்
பதில்
தொலைபேசியில்
உரைப்பதாய்?
புடம் போட்ட தங்கமாய்
நானிருக்க
எடைக்கு எடை
கேட்டு ஏனிந்த அவலம்..
என்னை பெற்றது
பெற்றோரின் பாவமா ?
பெண்ணாய் பிறந்தது
எந்தன் பாவமா ?
யாரின் குற்றமிது
யார்வந்தால் தீருமிது
பொன் வேண்டாம்
பெண் மட்டும்
மண் வேண்டாம்
மனம் மட்டும்
விரும்பும் இதயம்
ஒன்றேனும் இல்லையா
உயிரின் வலிகளில்
உணர்ச்சிகள் தொல்லையா
பதில்கள் வராத
கேள்வியென்று
பழகிய மனதிற்கு
தெரியும் ..
ஆனாலும்
உணர்வுகள்
உயிரைக் கொல்லும்
நொடிகளில் தேடுகிறேன் ..
எமன் வரும் நாள்
எதுவென்று ?
அவன் எப்படி வருவான்
அவனும்....
ஆடவனாயிற்றே ?