இரும்பை விழுங்கியவன்

சின்னவனுக்கு
ஒன்றரை வயது
உயிரற்ற உருவ உலகில்
உயிருள்ள அரசன்போல்
உத்தரவிட்டான்
உளறியபடியே
தலையாட்டியபடியும்
கைகொட்டியபடியும்
நகர்ந்தபடியும்
கிடந்தபடியும்
ஆனந்தமாய்
அவனுலகம்
கிலுகிலுப்பைகளோடும்
பொம்மைகளோடும்

திடிரெனத் திரும்பியவன்
தவழ்ந்து தவ்வி
தலைவலி மருந்தை
எடுத்துக் கவ்வி
நக்கி முக்கி சினுங்கையில்

இரும்பை விழுங்கியதுபோல்
முகத்தில்
இறுக்கம் தழும்பியதுபார்!

சனிக்கிழமை காலையொன்றில்
உள்ளங்கையில் எண்ணெய்
நிறைத்து
உச்சந்தலையில் ஊற்றி
நனைத்து
சிலாகித்திருந்தபோது
பரணிலிருந்த பாத்திரமெடுக்கப்ப்
பணித்தாள் மனைவி
பற்றியெடுக்க
கைவழுக்க
வந்துவிழுந்தது
வரிசையாய்
கோபமாய்ப்
பார்த்தவளைப்
பாவமாய்ப்
பார்க்கையில்

இரும்பை விழுங்கியதுபோல்
முகத்தில்
இறுக்கம் தழும்பியதுபார்!

நாள்பட்ட வியாதிபோல்
தொற்றிச் சுற்றித்
தொடர்ந்த துர்பழக்கங்களை
அன்றொருநாள்
விரட்டியடித்து
விட்டுவிட
அன்றுமுதல்
என்னவரோடும்
மற்றவரோடும்
எழுந்த இடைவெளியில்
எங்குசென்றாலும்

இரும்பை விழுங்கியதுபோல்
முகத்தில்
இறுக்கம் தழும்பியதுபார்!

நாள்கெட்ட வியபாரநொடிப்பில்
விக்கித்தவிக்கும்
நாளொன்றில்
நாளும் காணும்
நண்பனிடம்
கடமை கடந்த
காலங்களில்
காலம் கடந்த
தவணைகளில்
கையிருப்பை விளக்கி
கையாறு விளக்கி
கைமாத்துக் கேட்கும்போது

இரும்பை விழுங்கியதுபோல்
முகத்தில்
இறுக்கம் தழும்பியதுபார்!

இப்படி
இன்னுமின்னும்
இரும்பை விழுங்கியவன்
எங்கும்
எதிர்பட்டால்
ஒருமுறை
புன்னகைத்துப்
போங்கள்
இரும்பு தொலையட்டும்
இறுக்கம் விலகட்டும்!

எழுதியவர் : சர்நா (25-Apr-14, 4:25 pm)
சேர்த்தது : சர் நா
பார்வை : 142

மேலே