அவள் எனக்கு வேண்டும்-7

சுதாரித்துக் கொண்டு “சிவா! இதுதான் கோமதியோட தாய்மாமன்”, என்றாள்.
“வாங்க தம்பி.. எப்போ வந்திங்க?", என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.
சிவாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பாட்டி. இருவரும் கை கொடுத்துக்கொண்டு நண்பராகிவிட்டனர்.
தாய் மாமன் என்றவுடன் கையில் அறிவாளுடன் பெரிய மீசை வைத்துக்கொண்டு வருவான் என்று பார்த்தால் இவன் நம்மைபோலவே இருக்கானே என்று நினைத்துக்கொண்டான்.
அவன் தன்னை சாப்ட்வேர் இன்ஜினியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
சிவா மனதுக்குள் நினைத்துக் கொண்டான். 'சொந்தத்தில் திருமணம் வேண்டாம் என்று எடுத்து சொன்னாலும் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்களே' என்று....
அதற்குள் கோமதி வந்து,
“மாமா! அப்பா பணம் எடுத்து வர சொன்னார்கள்”
என்று கார்டை கொடுக்க, அவன் வாங்கிக்கொண்டு,
“நான் போயிட்டு வரேன்.. நீங்க பேசிக்கொண்டு இருங்கள்”, என்று எழுந்தான்.
சிவா, “நானும் வருகிறேன்”, என்று அவனுடனே கிளம்பினான் அவளை நிமிர்ந்து பார்க்காமல்....
கோமதி அக்கா கோமதியை பார்த்து, “ஏண்டி மாமாட்ட சொன்னா என்ன.. சிவாவுக்கு உன்ன....” என்று இழுக்க…
“சும்மா இருக்கா.. எனக்கு டாக்டர்ன்னாலே பயம்மா இருக்கு”, என்றாள்.
அப்பொழுது அந்த வழியாக ஒருவர் அடிபட்டு ரத்தத்துடன் வரவும், அதை பார்த்து கோமதி மயங்கி விழுந்தாள்.
அக்காவால் சட்டென எழுந்திரிக்க முடியாமல் எழுந்திரிக்க சிவா வந்து விட்டான். அக்கா விளக்கம் சொல்வதற்குள் அவளை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
அவனும் டாக்டர் என்பதால் அவளது பயம் புரிந்தது.
கோமதியின் அக்காவிடம் வந்து, “என்னாச்சு?” எனறான்..
“ரத்தத்தை பார்த்து”, என்று விளக்கம் சொல்ல அவன் கேட்காமலே சொன்னாள்...
“சின்ன வயதில் ஊருக்குள்ள யானைக்கால் நோய் இருக்கான்னு டெஸ்ட் பண்ண வருவாங்க.. அப்போதிருந்து அவளுக்கு டாக்டர பார்த்தாலே பயம்”, என்றாள்.
அப்போது அனைவரும் அங்கு வந்துவிட, கோமதியின் அப்பா டாக்டரிடம்,
“ஏன் டாக்டர்! அவள் பயத்தை போக்க என்ன செய்வது?” என்றார்.
“இதுக்கு மருந்து மாத்திரையெல்லாம் தேவையில்லை சார்.. ஒரு டாக்டரா
பார்த்து கட்டிக்கொடுங்க.. தானா சரியாயிடும்”, என்றார்.
சிவாவின் உதட்டோரத்தில் ஒரு புன்னகை வந்து மறைந்தது. அவன்
வெளியே சென்றுவிட,
கோமதியின் தாய்மாமன் கோமதியின் அப்பாவிடம்,
“மாமா! உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்”, என்றான்.
“இருங்க மாப்ள! ஒரு நிமிடம்”, என்று சொல்லி விட்டு அவர் வெளியில் சென்றார்.
“அம்மா! நீங்க எல்லாம் கிளம்புங்க வீட்டுக்கு”, என்று சொல்லி விட்டு வந்தார் சிவாவின் பாட்டியை பார்த்து…
அனைவரும் சென்றவுடன் அவனிடம் வந்து, “சொல்லுங்க மாப்ள..”, என்றார்.
அவன் தயங்கித் தயங்கி, “சிவாவுக்கே கோமதிய கட்டிக்கொடுத்தா என்ன..!”, என்றான்.
அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி.
“உங்களுக்கு சம்மதமா?”, என்றார்.
“ம்.. சம்மதம். நான் வேளை பார்க்குற இடத்தில ஒரு பொண்ண காதலிக்கிறேன்.. அதான்...”, என்றான்.
அவனை ஆச்சரியமாக பார்த்தவர்...
“உங்க அக்கா.. அதான் என்னோட மனைவி.. ஏதாவது…”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்”, என்றான்.
“அப்பாடா!” என்றார்.
“ஏன் மாமா?”, என்றான்.
“மாப்ள ஒரு விஷயத்தை உங்ககிட்ட சொல்றேன். அந்த சிவா! என்னோட தங்கச்சி மகன்”, என்றார்.
(தொடரும்)