நீ வருவாயென

என்னவோ
ஓரிரு நாட்களாக என்
எண்ண ஓட்டங்கள்
ஒவ்வொன்றும்
உன் நினைவாகவே
இருக்கின்றன!

ஆடிப்பட்டம் பார்த்து
விதைவிதைத்த பின்
தென்மேற்குத் திசையில்
கருமேகம் சூழ்கிறதாவென
வெற்றுவானத்தை
அண்ணாந்துப் பார்க்கும்
விவசாயி போல்
என் விழிகள் நீ வரும்
வழி நோக்கியே காத்திருக்கின்றன!

அலுவலகக் கோப்புகளையும்
அமைதலுடன் ஆராய்ந்து
பார்த்துக் கையெழுத்திடுமுன்
விரல்கள் மெய்யாகிய
உயிரெழுத்தைத் தழுவ
மறுப்பதேன்னவோ?
வழி பார்க்கும் உயிர்தேடி
விரைவில் வருவாயென
உயிர்மெய்கள் ஏங்குகின்றன!

நிலாவைக்காட்டி குழந்தைக்கு
சோறூட்டும் அன்னைபோல்
உன் நிழல் படத்தைக்
காட்டியே அங்கலாய்க்கும்
என் மனதைத் தேற்றிக்
கொண்டிருக்கிறேன்!

................சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (28-Apr-14, 10:16 pm)
Tanglish : nee varuvaayena
பார்வை : 164

மேலே