ஈற்றடிக்கு வெண்பாக்கள் - நேரிசை வெண்பாக்கள் 26

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தருமே - மறந்தேனும்
பொய்சொல்லி வாழற்க! அவ்வாறு பொய்சொல்லி
உய்வதும் வாழ்வா உணர்! 1 *

தென்திசையின் தூரத்தில் கானகத்தில் கண்ணான
என்னவளைக் காணாது நானிருக்க - பொன்னான
எண்ணத்தில் கண்ணான என்னவள் வந்ததால்
தண்ணென மாறும் தழல்! 2 *

தென்திசையின் தூரத்தில் போர்க்களத்தில் கண்ணான
என்னவளைக் காணாது நானிருக்க – பொன்னான
எண்ணத்தில் கண்ணான என்னவள் வந்ததால்
தண்ணென மாறும் தழல்! 3 *

அக்கினி நட்சத் திரவெய்யில் வீட்டினது
பக்கமெல்லாம் தீயாகச் சுட்டுவிட - பக்கமாக
எப்பக்கம் போனாலும் தாங்காதே எங்குமே
வெப்பம் உயரும் உலகு! 4 *

கண்ணே! கனியமுதே! கற்கண்டே! காதலியே!
விண்ணில் ஒளிவீசும் வெண்மதியே - எண்ணமெலாம்
பல்கிப் பெருகும்நீ ஊடலோடு பேசினால்உன்
சொல்லே மிகவும் சுடும்! 5 *

கண்ணே! கனியமுதே! கற்கண்டே! காதலியே!
விண்ணில் ஒளிவீசும் வெண்மதியே - எண்ணமெலாம்
பல்கிப் பெருகும்நீ ஊடலோடு சொல்கின்ற
சொல்லே மிகவும் சுடும்! 5 a

அடிமேல் அடிவைத்து அண்டை மனையை
திடீரென்று ஆக்கிர மித்து – கொடியதான
தொல்லை தருவோரைத் தண்டிக்க நன்னயச்
சொல்லே மிகவும் சுடும்! 6 *

என்னன்பின் அத்தைமகள்! எல்லையில்லா ஆசைமகள்!
என்றும் எழிலார்ந்த காதலனை – இன்றுபோல்
நாணமுடன் ஊடலாகி நல்முகம் காட்டிட
காண வருமாங் கனி! 7 *

விண்ணிலே வீசுகின்ற தென்றலைப் போன்றஎன்
கண்ணவளே! காதலியே! உன்னையென் – கண்ணுக்குள்
கண்ணாகக் காத்திடுவேன் என்னைநம்பு இன்னுமேன்
கண்ணோரம் கண்ணீர்க் கடல்! 8 *

'வெண்பா எழுதலாம் வாங்க' என்ற தளத்தில் அகரம் அமுதன் அளித்திருந்த 'ஈற்றடிக்கு வெண்பா' என்ற பயிற்சிக்கு முயற்சியாக நான் எழுதிய வெண்பாக்கள்.

– அகரம் அமுதன் வாழ்த்து:

உள்ளம் குளிர்ந்தேனே உம்பாவில்; என்கண்ணில்
வெள்ளம் நிறைந்தேன் மிகையாமோ? - அள்ளக்
குறையாக் கலம்போலக் கொஞ்சுதமிழ்ப் பாக்கள்
நிறைவாய்த் தருகின்றீர் நீர்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Apr-14, 5:58 pm)
பார்வை : 106

மேலே