அட்சய திரிதியை என்னும் மோசடி

அரை கிலோ
அரிசி வாங்க
வக்கற்ற மனிதர்கள்
நிறைந்து வாழும்
பாரத திரு நாட்டிலே
ஆயிரத்தைநூறு கிலோ
தங்கம் விற்றதுவாம்
அட்சய திருதியை என்னும்
மோசடி திரு நாளில்
தள்ளுபடி என்னும் வார்த்தை கூறி
தங்கம் எனும் மோகம் தூண்டி
பெண்களை கவர்ந்திழுத்து
கல்லா கட்டும்
அண்ணாச்சிகளும், சேட்டுகளும்
மளையாளிகளும்
அடுக்கடுக்காய்
கிளை திறப்பார்
நம் ஆசையை
அறியாமையாக்கி....
சேதாரம் காட்டி காட்டி
சுருட்டிடுவார் பல கோடி
செய்கூலி என்று கூறி
கோமாளி ஆக்கிடுவார்.....
வாட் என்னும்
வரி விதிப்பும்
சுமத்திடுவார்
நம் தலையிலேற்றி
தொலைக்காட்சி வழி வந்து
மஞ்சள் உலோகம் காட்டி
மயக்கிடுவார் நடிகை வந்து...
முதலீடு எனும் பெயரில்
தங்க நகை திட்டத்தில்
தந்திரமாய் மாட்டிக் கொள்ளும்
மங்கையரே யோசிப்போம்
சென்ற அட்சய திரிதியையில்
நகை வாங்கி
எவ்வளவு அதிர்ஷ்டம் கண்டோம்....?
நகை கடைக்காரன் பிழைக்க
நம்ப வைத்த மோசடியே
அட்சய திரியை என்னும்
அபத்தமான ஓர்விழா...
முண்டி அடித்து
முன்பதிவு செய்து
வரிசையில் நின்று
வியர்வையில் நனைந்து
அலைமோதும் கூட்டத்தில்
தலைபோக நுழைந்து
புன்னகை தொலைத்து
பொன் நகை வாங்கி
ஏற்றமா கண்டோம்....?
ஏமாற்றமே
கொண்டோம் கொண்டோம்....

எழுதியவர் : சித்ரா ராஜ் (4-May-14, 12:02 pm)
பார்வை : 130

மேலே