நகரத்தார் வீட்டுக் கல்யாணம் - 1

ஜய வருடம் சித்திரை மாதம் 5ஆம் தேதி
வெள்ளிக் கிழமை அனுஷ நட்சத்திரமும்
சித்த யோகமும் கூடிய சுபயோக சுப
தினத்தில் செட்டிநாடு காரைக்குடியில்
நண்பர் மகளுக்குத் திருமணம்.

முகுர்த்தம் காலை 9.00 மணி
முதல் 10.00 மணி வரை.

நடை பயின்ற காலத்திலே
கொடை செய்யப் பயின்றவர்கள் ,பழகியவர்கள்
செட்டி நாட்டு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்
நகரத்தார்கள் வீட்டு திருமணங்கள்
ஒவ்வொரு நிகழ்வும் பார்க்கவேண்டியவை
பதிவு செய்யப்படவேண்டியவை.

நண்பர் அருமை மகளுக்குத் திருமணம்
நல்ல நண்பர் நலமே அழைத்த காரணத்தால்
நானும் மகிழ்வோடு காரைக்குடிக்கு பயணமானேன்

நண்பர் வீடு தெரிந்ததால்
வீடு அடைய சுணக்கமில்லை .

கல்யாண வீடு
வீதி நிறைத்து கொட்டகை
கொட்டகையில் துணி அலங்காரம்
குலை வாழை இருபுறம் கட்டி
நுங்கு ,கமுகு, இளநி வரிசையாய்
தொங்கும் தோரணங்கள்

வீட்டு முன் வாசலிலே
இருபுறமும் உடையவர்கள் நிற்க
வாங்க,வாங்க என்று
வாய்நிறைய வரவேற்ப்பு.

ரத்தினக் கம்பளம் விரித்த மேஜை
வெள்ளியிலே
சந்தன பேலா, பன்னீர் செம்பு
நாளைய மாப்பிள்ளைகள்
அதற்கு பொறுப்பு.

சுகந்த பன்னீர் தெளிக்க,
வாசனை சந்தனம் வழங்க
உள்ளத்து மகிழ்ச்சியெல்லாம்
உடன் கொடுக்கும் சிறப்பு.

காலை மணி ஏழு......காலைப் பலகாரம்

சாப்பாட்டு கட்டு
தள்ளுமுள்ளு இல்லா
பந்திக் கட்டு .

வரிசை வரிசையாய்
மேஜை அமைத்து
தஞ்சாவூர் தாட்டெலையில்
நுனியிலை வெட்டி
இலையிலே துணைப்
பலகாரங்கள் ஏழு விதமாய் வைத்து
பந்தி தயாராய் இருக்கும் அழகு.

வந்தவர்கள் வரிசையாய் அமர
தலைப் பலகாரங்களாக இட்லி ,
ஆப்பம், மசால் தோசை, சுடச் சுட வர,
ஏலம் மணக்கும் தேங்காய் பாலும்,
ஆவி பறக்கும் பலகாய் சாம்பாரும்,
பூண்டோடு வத்தக் குழம்பும்
சிந்தாமல் சிதறாமல் பரிமாறும்
அழகே அழகு.

பந்தி விசாரணை என்று வரிசைக்கு
நால்வர் இன்முகம் காட்டி
வேண்டியது கேட்டு சத்தமில்லாமல்
வந்து வைக்கும் பாங்கு.

வைத்திருக்கும் பலகாரங்கள்
ஒருமுறை முடித்தால்
மாலை வரை பசி தாங்கும்.

வாய் மணக்கும் காப்பியும்
ஏலம் மணக்கும் தேநீரும்
வேண்டியவர் விருப்பம் அறிந்து
கொடுத்திடும் நேர்த்தி .

பந்தி கட்டுக்கு வெளியே
உலர் பழங்களும் ,இஞ்சி ,நெல்லி
கொழுந்து வெற்றிலையும்
வாசனைப் பாக்கும்
தாம்பாளங்கள் அணிவகுக்க
அலங்கரிக்கும் தாம்பூலம்.

(திருமண வீட்டு நிகழ்சிகள் அடுத்து வரும்)

எழுதியவர் : arsm1952 (4-May-14, 4:19 pm)
பார்வை : 447

மேலே