எது வாழ்க்கை
அன்றாடமும்
தூக்கம் மட்டும் இல்லையெனில்
உள்ளுணர்வை
அவ்வப்போது
கொலை செய்ய வேண்டியதாய்
இருந்திருக்கும்
அடுத்தவர்களின் முதுகையும்
அவர்களின்
தேடல் தடங்களையும்
தனது விமர்சனத்திற்கு வசதியாய்
விழித்தவுடன்தான்
அமைத்துக் கொள்கின்றது
மனது
என்றாவது ஒரு நாள்
மௌனங்களிலோ
தியானத்திலோ
தன்னை
பரிசோதிக்கலாம் என்றால்
வன்மப் புயல் வந்து
அதர்மத்தை
அரங்கேற்றி விடுகின்றது
ஆன்மாவிற்குள்
தனது முகவரியை
வெளிப்படுத்தவும்
தனது இருப்பை
அறிமுகப்படுத்தவும்
தவித்த
உள்ளொளியை
நம்மால் வளர்க்கப்பட்ட
இருள்
மூழ்கடித்துவிடுகின்றது
மனதின்
வளர்ப்புப் பேதமைகளும்
பின் தொடரும்
சாபங்களும்
நம்மை
பேருருவப்படுத்திவிட்டு
பேயாய் சிரிக்கின்றன
நம் தன்மானம்
சிறுமைப்படட்டும் என்று
மிக நீண்டதொரு பயணத்தின்
களைப்பில்
காலம்
கை விடப்பட்ட நாட்களில்
நிராகரிக்கப்பட்ட
கேள்வி ஒன்று
தாகத்துடன்
நம்மை எதிர் நோக்குகின்றது.,
உனக்குள் இருக்கும்
ஆன்மாவை
இனியாவது
உயிர்ப்பிப்பாயா என்று !