நீ நான் நம் நட்பு
இனிப்பியலின் இயல் அழகே,
என் தோழியே ! உன்னோடு
என் நட்பு பூத்ததெப்படி?
மொழிகிறேன் கேள்....
என்னோடு பேச
ஒரு கோடி வார்த்தைகளிருந்தும்
உதட்டோடு பூட்டிக்கொண்ட உன்
வார்த்தைகளில் பூத்ததோ ?
இல்லை..
நீ கைமூடி, இதழ் திறந்து,
என் மேல் வீசிய
பஞ்சுமிட்டாய் புன்னகையால் பூத்ததோ ?
இல்லை...
நான் அழைத்து
தொலைவுக்கு அப்பால் இருந்த
அலைபேசி அழைப்பின்
தனிமையில் பூத்ததோ ?
இல்லை..
உப்பு ஒளிந்த கடல்காற்று
கருணையின்றி உன் கன்னம் வருட,
காரமாய் நீ சுவைத்த
மீன் துண்டால் பூத்ததோ ?
இல்லை..
நீ சோகத்திலே கிடந்தாலும்
நான் ரசிப்பேன் என்பதற்க்காய்
நீ அனுப்பிய ஒரு கூடை
சிரிப்பின் சின்னங்களால் பூத்ததோ ?
இல்லை..
இயற்கைக்கு முரணாய்
வலமிருந்து இடமாய்
நீ வாரிக்கொண்ட கூந்தலின்
அழகால் பூத்ததோ ?
இல்லை..
உடைந்து போன உன்காதலின்
ஒவ்வொரு துகளிலும் அதன்
ஆழம் காட்டிய அதிர்ச்சியில் பூத்ததோ ?
இல்லை..
என் நேர்முகத்தேர்வுக்கென
என் ஆடை தேர்ந்தேடுக்கும்
உரிமையின் ஓரத்தில் பூத்ததோ ?
இல்லை..
நீ தோழா ! தோழா !
என்றழைத்து புன்னகை பூக்கும்
உணர்வாலே பூப்பெய்ததடி
என் தோழமை.. உன்மேல்
நீ புன்னகை பூத்துக்கொண்டே இரு
பூப்பெய்துகொண்டே இருக்கட்டும்
நம் நட்பு...