முதுமையை தள்ளாதே

தாயை
மறைவில் மிதித்தே வந்தவன்
தந்தையை
மன்றத்தில் மிதித்தே வளர்ந்தவன்
வழியில்
மதிக்கப் பழகவில்லையோ
மதிப்புத் தெரியாமல்
வனப்பைப் பார்த்ததும்
வளர்ப்பை மறந்து
வளர்த்தவர்களை துறந்து
முதியவர்கள் கொதிக்கும்
முதியோர் உலையில்
அள்ளிப் போட்டிருக்கிறான்

பால் உண்ட
முலைகளுக்கு
உலை வைத்து
பாதகம் செய்த
கொலைகாரனே ..!

கோயிலை
இல்லத்தில் சேர்த்து
இடித்துவிட்டாய்
மந்திரச் சொல் தந்த
மகானை
தந்திரமாய் தானமாக்கி
தள்ளிவிட்டாய்
உணர்வுகளுக்கு
கொள்ளி வைத்து
உடலுக்கு மிச்சத்தையும் வைக்க
கடவுளுக்கு நேர்ந்து கொள்ளும்
எச்சமே..!
துச்சமாக நீ தூக்கி எறிந்தது
பத்திரமாய் பாதுகாக்கப்படவேண்டிய
மனித வைரங்களடா
வயிறு எரிகிறது

நீ இருந்த இடம்
எரிகிறதே
உன்னிடம் அதன்
எரிச்சல் இல்லையா?
இந்த துணிச்சல்
நீ எங்கு சுவைத்த எச்சில்

நீ தூங்கிய இடத்தை
தூக்கி எறிந்துவிட்டு
வாங்கிய இடத்தில்
எப்படி தூங்குகிறாய்?
நினைவு கணவுகள் உனக்கு
நினைவூட்டவில்லையா ?
உன் நித்திரையை கலைக்கவில்லையா?

உன்னை ஆளாக்கியவளை
முதியோர் ஆலையில் போட்டு
ஆட்டு வித்தாயே
ஆடிப்போனவள்
அங்கேயே அடங்கிவிட்டாள்
அது போதுமே உனக்கு

உனக்கு சேவைக்கு
தகுதியாய் தெரிந்தவள்
உன் சேமிப்பு வங்கியின் சேவைக்கு
உட்படாதவளாய் உதறப்பட்டது எப்படி?

உனக்கு
சோறு ஊட்டியவளை
தேரில் ஏற்ற வேண்டாம்
தெருவில் விட்டிருக்க வேண்டாமே
வசதி வாய்த்ததும்
உன் அசதி போக்க
துடித்தவள்
உனக்கு வசதிப்படாதது எப்படி?

முதிர்ந்த பழம்
கிளையில் தாங்கப் படுவதில்லை
முதிர்ந்த கிழமும்
வீட்டில் தாங்கப்படுவதில்லை
பழம் விலை போகிறது
கிழம் விலையாகிறது
இந்த களம் யார் அமைத்தது?

பால் ஊட்டியவளுக்கு
கூழ் ஊற்றப்படுகிறது
வாழ்வாங்கு வாழ்ந்த
தகப்பனும்
கூழ் வாங்க
தாழ்வு வாங்கி கிடக்கிறான்
பிள்ளையாய் இருந்தவன்
பிள்ளைபெற
கொள்ளை போவது எப்படி?
ஆணாய்
ஆதிக்கம் செய்தவன்
அப்பனானதும் - எந்த
சுப்பனானாலும்
அடங்கித் தான் போகிறான்
கொள்ளையிட்டவளும் ஒருநாள்
தொல்லையாகப் போகிறாள்
கொல்லையில்
தொலையப்போகிறாள்

முதுமை என்பது முழுமை
முழுநிலவை மூட்டைக்குள்
முடக்கிவிட்டாய் - இனி
உன் இரவுகள் எப்படி
வெளிச்சமாகும்
இரவல் விளக்குகள்
இரவு தாங்காது
உனக்கு இரக்கமும் காட்டாது
தீர்ந்து போகும் வரை தான்
சூழ்ந்து கொண்டிருக்கும்
ஆனால்
நீ தீர்த்து கட்டிய பிறகும்
உன்னை ஆர்த்துக் கொண்டிருக்கும்
உன் பெற்றோரை
சேர்த்துக் கொள்
சோகம் உன்னை சேர்ந்து கொல்லாது

புறமுதுகிட்ட புதல்வனுக்கு
பசியாற்றிய மார்புகள்
பிணியென்றே - அதை
அறுத்திட துணிந்து
மிரட்டினாள்
புறநானூற்று தாய் ஒருத்தி
புறக்கணிக்கும் புதல்வர்களையும்
நினைத்து
புழுதியில் அழுதுக் கொண்டிருக்கிறார்கள்
புதுயுகத் தாய்கள்

நக்கிக் குடித்தது
நாய் ஜென்மங்கள் ஆச்சே
அவற்றின் வாய் பட்ட இடத்தை
வாள் கொண்டு
வீழ்த்தவே அவர்களும் துடிக்கிறார்கள்

முதியோர்கள்
முடியும் காலத்திற்கு முன்
முடித்து விடாதே
ஒடித்து விடாதே
இருந்திட விடு
இயங்கிட உதவு
உன் பெற்றோரை
நீ பெற்றது போல்
பேணி வளர்
காணி நிலத்திற்காய்
இரு உயிர்களை
காலி செய்துவிடாதே
மண்ணை மீட்கலாம்
மண்ணில் புதைந்தோரை
மண்டியிட்டும் மீட்க முடியாது
சுமந்தோரை சுமந்து கொள்
அது சுகம்
சலிக்காத வரம்..!

எழுதியவர் : Raymond (12-May-14, 3:34 am)
பார்வை : 102

மேலே