சிறப்புக் கவிதை 60 மெய்யன் நடராஜ் பிசாசுகளின் பொது நூதனசாலை
மரணம்வரை
வாழ்தலுக்கான
ஒப்புதல்களோடு
மணம் புரிந்தவர்கள்
மரணத்தை வாழவைத்துவிட்டு
வாழ்வை கொன்று புதைப்பதில்
தேர்ந்தவர்களாகிப் போவதால்
அனாதையாகிறது திருமணம்.
உனக்காக என்
உயிரையே கொடுப்பேன் என
உறுதி பூண்டவர்களும்
உயிருக்காக உன்னையும்
பலிகொடுப்பேன் என
நிறம் மாறுகின்ற
நிமிஷங்களில்
கண்ணீர் வடிக்கிறது காதல்.
ஆயுளுக்கும்
உன்னிதயச் சிறையில்
கைதியாகிக் கிடப்பேன் என
கைதியாகிக் கொண்டவர்களும்
விடுதலை தேடிய
விவாகரத்துக்களோடு
வீதியில் உலாவுகிறார்கள்
சக்கரம் முறிந்த தேராக..
ஏழேழு ஜென்மங்கள்
இணைந்திருக்கும்
எங்களைப் பிரிக்க
எமன் வந்தாலும் அந்த
எமனுக்கும் எமனாவோம் என்றோரும்
தங்கள் வாழ்வுக்கு தாங்களே
எமனாகிப் போக,..
விளக்கைப் பிடித்துக்கொண்டு
கிணற்றில் விழுகின்ற
வாழ்க்கைப் பரீட்சையை
எழுதிவிடத் துடிக்கும்
ஏராள விண்ணப்பதாரிகள்
முண்டியடிப்பு
எவராலும் முடியாத
முறியடிப்பு.
வெளியே இருந்து
உள்ளே இருப்பதை
அறியத்துடிக்கும்
ஆவலாளிகளுக்கும்
உள்ளே சென்ற
பயங்கரத்திலிருந்து
வெளியேற தவிக்கின்ற
அவஸ்தையாளிகளுக்கும்
மத்தியில் கல்யாணம்
என்பது வாழ்க்கைப் பூங்காவில்
காலம் கட்டிவைத்த
பிசாசுகளின் பொது நூதனசாலையோ?