இதமான வாழ்க்கைக்கு
புலன்களின் உதவி
வாழ்விற் கவசியம்.
புலன்கள் வழியே
தீருது தேவைகள்.
தேவைகள் தாண்டி
ஆசைகள் தூண்ட
புலன்களின் அடிமையாய்ப்
போனவர் கோடி.
ஈர்ப்பதையெல்லாம்
ஈட்டிட வேண்டி
இழப்பார் வாழ்வின்
இனிமை யெல்லாம்.
ஐம்புலன் போலே
ஆறாம்புலன் மனம்
பழக்கிய யானையாய்
பணியனும் நமக்கு.
புலன்களின் தூண்டலில்
புத்தி மயங்க
மனதுக்குள் ஏறுது
மதயானை வெறி.
அறுபுலன் ஆட்டம்
அயராது நடக்கின்
துயருறும் வாழ்க்கை
துக்கத்தில் மூழ்கும்.
மனதினை அறிந்தால்
மறையும் மயக்கம்
மனதினை ஆள
விலகும் துன்பம்.
புலன்களைப் பூட்டுதல்
எளிசெயல் இல்லை.
புலன்வழி அறிவதை
புறந்தள்ள முடியுமோ?
மனதின் வழியிலே
அமையுது வாழ்க்கை.
எண்ணமே சொல்லாய்
செயலாய் ஆகுது.
ஒழுங்கு மனத்தில்
ஊறும் நற்சிந்தனை.
சிந்தனைச் செறிவில்
சிறக்கும் வாழ்வு.
ஒழுங்கு மனமே
உயரிய நண்பன்.
ஒழுங்கு குறைய
முதன்மை எதிரியாம்.
மனதினை ஆளுதல்
எவருக்கும் சாத்தியம்.
எப்படி யென்பதை
என்வழி சொல்கிறேன்.
புலன்வழி புகுவதை
பகுத்திடும் மனது
பிடித்தது பிடிக்காததென
பிரித்திடும் உடனே.
பிடித்ததைப் பெறவும்
பிடிக்காததை விலக்கவும்
பிடிவாதம் செய்யும்
பித்தத்திலாழ்த்தும்.
பிடித்ததைப் பெறாவிடில்
பெருந்துயர் கொள்ளும்.
விலக்க வியலாவிடில்
வெறுப்பினில் ஆழும்.
இன்பம் தருமெதிலும்
இச்சைக் கொள்ளும்.
இச்சை தீர்ந்ததும்
வேறிடம் செல்லும்.
கையிலிருப்பதில்
களி கொள்ளாமல்
அனைத்தும் அடைய
ஆர்வம் காட்டும்.
கடன் வாங்கிக்
களிக்கச் சொல்லும்.
கடன் வாங்க
கவலை கொள்ளும்.
கையூட்டும் வாங்க
பொய் பேசத் தூண்டும்.
நாளை வரை பொறுக்காது
இக்கணமே வேண்டுமென்கும்.
பொய்க்கனவு காணும்
கற்பனையில் சுகங்காணும்
அச்சுகமே உண்மையென
அப்பட்டமாய் பொய்சொல்லும்.
அங்கலாய்க்கும்
ஆர்ப்பரிக்கும்
அமைதியொழித்து
அல்லல்படும்.
பேயாட்டம் போடும்
பித்தாகிப் புலம்பும்
ஓயாமல் ஓசையிடும்
ஆயாசம் மிகக் கொள்ளும்.
இத்தனையும்
இதற்குமேலுஞ் செய்யும்.
மற்றவர் மேல்
பழி போடும்.
உதவியைப் புறக்கணிக்கும்.
உலகமே நமக்கெதிராய்
உறவெல்லாம் உயிர்ப்பகையாய்
போனதாய் புறஞ்சொல்லும்
ஒருகணமும் ஓயாமல்
ஓராயிரம் சிந்தனைகள்
மலைமலையாய் குப்பைசேர்த்தும்
மாளாது அதன் ஆட்டம்.
மனதின் இக்குணங்கள்
முழுதாய் அறிந்திட்டால்
மனமோட்டம் புரியும்
மனமடக்கத் தெரியும்.
புலன்வழி அறிவதை
பகுத்தல் நிறுத்தவேண்டும்.
இச்சையும் வெறுப்பும்
இயல்பாய் தடுக்கவேண்டும்.
இது வேண்டும்
அது வேண்டும் – என
எண்ணந் தோன்றுகையில்
ஆராய்ந்து ஒடுக்கவேண்டும்.
பிறக்கும் எண்ணம் எதையும்
உடனுக்குடன் ஆராய்ந்து
பிறழான எண்ணமெனில்
பிறந்தவுடன் துறக்கவேண்டும்.
ஆசையோ அருவெறுப்போ
ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
தகாததெனத் தெரிந்தால்
தெளிவுடன் தவிர்க்கவேண்டும்.
பலவாறாய்ச் சிந்தனைகள்
பரவுவதில் பயனில்லை.
பயனில்லாச் சிந்தனையால்
அயர்வே பலனாகும்.
மனதின் இயக்கம்
மூச்சுடன் இயைகிறது.
மூச்சினைச் சீராக்க
மனமமைதி கொள்கிறது.
எச்செயல் புரியும்போதும்
மூச்சினில் கவனங்கொள்ள
எண்ணம் சீராகும்
செயலில் ஊக்கமிகும்.
உடைப்பெடுக்கும் உணர்வுகளை
உண்மையாய் அடக்கிவைக்க
மூக்குவழி செல்லும்
மூச்சை யுணரவேண்டும்.
சிறுபயிற்சி இதையென்றும்
சீராய்ச் செய்துவர – நாளடைவில்
மனம் சீராவதை
மகிழ்வுடன் அறிந்திடலாம்.
சீரான மனத்தில்
சேர்ந்த விஷமெல்லாம்
முற்றாக வொழிந்துவிடும்.
முழுவமைதி கிடைத்துவிடும்.
அமைதி தவழும் மனம்
ஆன்மபலம் கூட்டும்.
அணுகும் தடையெல்லாம்
அழகாய்த் தாண்டிடலாம்.
இன்பமோ துன்பமோ
இயல்பாய் அநுபவித்து
மிதமான உணர்வுடனே
இதமாக வாழ்ந்திடலாம்.
வாழ்க எவ்வுயிரும்
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்.