கண்ணுக்குள் நீ

இறைவனைத் துதித்தாலும்
இதழ்கள் அசைந்தாலும்
இதயத்தில் நீ!

நினைவுகள் பூத்தாலும்
கனவுகள் மலர்ந்தாலும்
மனதினில் நீ!

சிரிக்கின்ற போதும் - நான்
அழுகின்ற போதும்
கண்ணுக்குள் நீ!

நித்திரையில் இருக்கும் போதும்
நினைவுகளில் லயிக்கும் போதும்
நெஞ்சுக்குள் நீ!

கற்கண்டாய் சிரிக்கிறாய்
கவிதைகளை வடிக்கிறாய்
நான் வரைந்த ஓவியத்தில்
நிழலாகத் தெரிகிறாய்
நிறந்தீட்டிப் பார்த்த பின்னும்
நிழலாக இருக்கிறாய்!

தூரிகையில் மை எடுத்து
காகிதத்தில் கோலமிட்டால்
கண் முன்னே நீ வந்து சிரிக்கிறாய்!
கண்களினால் என்னை நீ சிதைக்கிறாய்!

காமம் என்னைத் தழுவும் போதும்
கனவுக் கட்டிலில் சிரிக்கிறாய்!
கண்மூடி இருளில் நான் மூழ்கினாலும்
என்னை நீ சிலிர்ப்பூட்டிச் சிரிக்கிறாய்!

நான் எழுதும் ஓவியத்தில்
நான் எழுதும் காவியத்தில்
நாயகியாய் நீ மட்டும் இருக்கிறாய்!

நிஜத்தினிலே எப்போது
நீ வருவாய்?
நிழல்களுக்கு எப்போது
நிறந் தருவாய்?

கனவுகளை எப்போது
கலைத்திடுவாய்?
கவிதைகளை எப்போது
திருத்திடுவாய்?

என் கண்ணீரை எப்போது
துடைத்திடுவாய்?

இறைவனைத் துதித்தாலும்
இதழ்கள் அசைந்தாலும்
இதயத்தில் நீ!

கனவினில் லயித்தாலும்
கண்திறந்து பார்த்தாலும்
கண்ணுக்குள் நீ!

கவிதையாய் நீ!

எழுதியவர் : மனோ & மனோ (15-May-14, 4:55 pm)
Tanglish : kannukkul nee
பார்வை : 163

மேலே