நுரைக்கும் பீர்கள்
திறப்பான்களாலோ
பற்க்களாலோ ,கைகளாலோ
பாட்டில்கள் திறந்த படியிருக்கும்
பார்களில்
சோகங்கள் மூடிகளென
வீசியெறியப்பட்டு
உற்சாகங்கள் தற்காலிகமாக
நாற்காலியிட்டு அமர்ந்திருக்கின்றன !
சோகங்கள் தலைதூக்கும்
காலத்தை இருத்தி வைத்து
ஒவ்வொருவருக்குமான
முக்கால நிகழ்வுகளின்
பரிமாற்றம்
பீர்களின் நுரைகளென
நுரைத்துக் கொண்டிருக்கிறது !
விளாரென பிய்க்கப்போகும்
விடியலின் ரௌத்ரம்
புரியாமல்
போதைக் குதிரை
பிடரி சிலிர்த்து
உற்சாக ராஜபாட்டையில்
உலா வரும் பார்களுக்கு
வெளியே
தயாராக நின்று கொண்டிருக்கும்
யதார்த்தங்கள்
பார்களை சுற்றிச் சுற்றி
வந்தபடியே இருக்கிறது -
வெளியேறியவர்களின்
தோள்களில் சவாரிசெய்து
வீட்டினையடையும்
கர்மத்திற்காக !
மருத்துவமனைக்கும்
சுடுகாட்டிற்குமிடையிலான
தொட்டில்
ஒரு சமத்துவ ஊஞ்சலென
எரியும் திரவப் பிராவகத்தில்
தழும்பியாடிக் கொண்டிருக்க
பருகுமிவர்களுக்கான
சோகம் -
பாட்டிலிடை பீர்களுக்கும்
வெளியே நிற்கும் யதார்த்தத்திற்கும்
இடையிலான தூரத்தில்
மிதந்து கொண்டிருக்கும்
போதையில் உறைந்திருக்கிறது .