கசப்பிலே பிறந்தவள்

அடுக்கடுக்காய்
ஐந்து பெண் பெற்று
ஆறாவதும் பெண்ணைப்பெற்ற
அன்னம்மா அத்தை
ஆறாவது பெண்ணிற்கு
வேம்பு என்று
பெயர் வைத்தாள்...்
கசப்பில் பிறந்தவளாம்
அசராத அடுத்த
முயற்சியில்
ஆண் பிள்ளை பெற்றுவிட்டாள்
காலம் உருண்டோட
வயதோ திரண்டோட
இனிப்பாய் பிறந்த
ஆண்மகன் எட்டி உதைத்து
திட்டி தீர்த்தான்
வரம் வாங்கி
பெற்றப் பிள்ளை
கஞ்சிக்கு கணக்கு பார்த்தான்
முன்னால் பிறந்த
ஐம்பெரும் தேவியரும்
அடியோடு மறந்து போயினர்
அம்மா எனும் உறவை
எட்டிபார்த்தால் ஒட்டிகொள்வாள்
என்றஞ்சியே
விட்டுப் போனார்கள்
களை வெட்டி
கஞ்சி குடிக்கும்
கசப்பில் பிறந்த
வேம்பக்கா
சேதி கேட்டு
ஓடி வந்து
கஞ்சி ஊத்தி
காடு சேர்க்க
கை சேர்த்து அனைத்துப் போனாள்
பெற்றெடுத்த தெய்வத்தை....

எழுதியவர் : சித்ரா ராஜ் (18-May-14, 12:23 pm)
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே