பாவலர் அறிமுகம்நரியனூர் ரங்கு
தோழமை நெஞ்சங்களே
இந்த மழைக்கும் தளத்தின் தோழமைகளுக்கும் எப்போதும் ஒரு பாச பிணைப்பு என்னுடன் உள்ளது...
பெரம்பலூரில் தோழர் ஆண்டான் பெனியை நான் சந்தித்த வேளை ஒரு பெரு மழை மாலைப் பொழுதில்..(எனது மகிழூந்து சேற்றில் சிக்கி பள்ளத்தில் வீழ்ந்த கதை தனி...)
தோழர் சிந்தா எனதில்லம் வந்து என்னோடு உரையாடிய பொழுதில் வீட்டுக்குள் இலக்கிய வெப்பம் என்றாலும் வெளியே அடை மழை....(மின்சாரம் இல்லாமற் போனது தனிக்கதை..)
நேற்று அதிரடியாய் சேலம் ,பவானி ,ஈரோடு கோவை சென்று திரும்பும் பொழுது ஓமலூர் சென்று தோழர் நரியனூர் ரங்குவை சந்தித்து வந்தேன்....பெரு மழையும் காற்றும் அப்போதுதான் தொடங்கியது...!!!
(ஆக ஒங்க ஊருக்கு மழை வேணும்னா என்னை அழைத்தால் மழை கொண்டுவருவேன்..(ஆசை அஜித் உடனே பாட்டு எழுதறாரப்பா .."மழை வருது ...மழை வருது...குடை கொண்டு வா..".)...இல்லனா என்னை பார்க்க நீங்க வரணும்...நான் வந்தா ஊருக்கு குளிச்சி..நீங்க வந்தா எங்க ஊருக்கு குளிர்ச்சி..(அதான் ...வந்தொமில்லா...2 மணி வரைக்கும் பசியாத்தாம அங்ஙனே அவிக அவிக உரையாத்திக்கிட்டு கிடந்தாகளெ...ஆத்தி என்ன எமப் பசி அன்னைக்கு..சாந்தி அக்கா...எப்படித்தான் தாங்கிகிட்டு கிடந்தீகளோ..-புலமியின் குமுறல் கேட்குது.. ) அது வேறு...இது வேறு..புலம்ஸ்..
சரி சரி....தோழர் ரங்கு சிறந்த எளிமையான வரிகளால் படைப்பு அளிக்கும் வல்லாண்மை மிக்கவர்-ஆனால் வரிகளில் கந்தகமும் பாஸ்பரசும் கலந்து தருவார்...சமயங்களில் கிராமத்து மணம் வீசும் காதலையும் அள்ளி தருவார்.
..
வழக்குரைஞராக "சேவை " செய்கிறார்...ஆம் இவர் வழக்குகளை நாடி செல்லாமல் தன்னை நாடி வரும் சுற்று வட்டார ஏழைகளின் சிக்கல் தீர்த்து வருகிறார். இதற்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் பணியைத் துறந்து வந்து இங்கு சேவையாற்றுகிறார்..
விரைவில் இவரது கவிதை தொகுப்பு வெளி வர உள்ளது....
இவரது படைப்புகளுள் ஒன்றும் அதற்கான ஈஸ்வரன் ராஜாமணியின் விமர்சனமும் இதோ...
சிறப்புக்கவிதை 14 - நானும் கவிஞன் தான் - நரியனூர் ரங்கு
“விருது கிடைக்கட்டும் முதலில் - அப்புறம்
இந்த மலட்டுக் கவிதையும்
புதுப்புது கருத்துக்களாய் பிரசவிக்கும்
பின்னர் நானும் கவிஞன்தான்."
விருதுகளின் பெயராலும், விளம்பரங்களின் மூலமாகவும், அரிதாரம் ஒளித்த அங்கீகாரங்களால் பிரசவிக்கப்படும் போலிகளை , உண்மைக்கு நிகராக உயர்த்தி, உயர்த்தியே, உண்மைகள் அனைத்தும் மலடாகி நிற்கின்றன என்பதன் சாட்சி இக்கவிதை.
“நான் வளர்கிறேனே மம்மி!!” என்றபடி ஆரோக்கிய பானம் அருந்தும் சிறுவன், வளர்கிறான் என்பது உண்மை. அவ்வளர்ச்சிக்கு காரணம் அந்த ஆரோக்கிய பானம்தான் என்ற பொய்ப்பிரச்சாரம், சத்துமாவிலும் அவன் வளர்வான் என்ற உண்மையை மலடாக்கிவிடுகிறது.
மூக்குக்கண்ணாடிகளை மொத்தமாக குத்தகை எடுத்துக்கொண்ட பரிசோதனைக்குழாய் மருத்துவர்களின் “ இந்த பற்பசையில் உப்பு இருப்பது, உங்கள் ஈறுகளுக்கு கொண்டாட்டம்!!!” என்ற பிரச்சாரங்களில் மலடாகிறது, கம்மாக்கரையில் குளிக்கப்போகும் முறைப்பெண்ணை குறும்பு செய்து கொண்டே, வேப்பமரக் கொப்பொடித்து பல் விளக்கும், ஆறுமுகத்தின் ஈறுகளும் அதே அளவு திண்மை எனும் உண்மை.
இவ்வாறாக, புடவை முதல் புத்தகம் வரை, தவிடு முதல் தங்கம் வரை , போலிகளின் திணிப்பில் போதையேறி சுணங்கிப்போயிருக்கும் வாசகன்தான், வாழ்வியல் சொல்லும் கவிதைகளுக்கும் ஐ.எஸ்.ஐ முத்திரை கேட்கிறான், உண்மைதனை உணராமல்.
"ஒப்பிலா படைப்பு எனினும்,
சீந்துவார் இன்றி செல்லரித்தும் போவதுண்டு.
காலாந்தர விருது வெகுமதிக்கு
நாலாந்தர எழுத்தும் தேர்வது உண்டு.”
நேருக்கு நேராக நின்று, நடு நெற்றியில் நாசூக்காக ஊசி இறக்குகிறார் கவிஞர். வெறுமைகள் ஊக்குவிக்கப்படுவதும், திறமைகள் உதாசீனப்படுத்தப்படுவதும், நம் நாட்டில் , ஊழலை விட மலிந்து கிடக்கிறது.
பாதுகாப்புக்கயிறு கட்டி, பதினைந்து பேரை பந்தாடும் தொப்பை நடிகன், கோடியில் புரளுகிறான். ஒட்டிய வயிறோடு, ஒரு வேளை சோற்றுக்காக, ஒற்றைக்கயிற்றில் , உயிரைப் பணயம் வைத்து , ஊசலாடும் தெருக்கலைஞன், கடைக்கோடியில் பசியால் சாகிறான். போலி, புகழில் சிரிக்கிறது. உண்மை புழுதியில் கிடக்கிறது.
“கவிதையெனும் பெயரால் ஏதேதோ
சம்மந்தா சம்மந்தமின்றி - என
முகம் சுளிக்கத் தேவையில்லை”
தன் வீட்டு சாக்கடையை சுத்தப்படுத்த, உடல் முழுதும் கழிவைப் பூசிக்கொள்ளும் தொழிலாளியை பார்த்து முகம் சுளிக்கும் மனிதன்தான், ஊரார் சொத்தையெல்லாம் உலையிலடித்து, உள்ளாடை முதலாக வெள்ளாடை அணியும் அரசியல்வாதிகளை அண்ணாந்து பார்க்கிறான்.
போலிகளின் புகழ்ச்சி மழையில், பாதை மறந்து ஓடும் மனிதன் , உண்மை முள் குத்தும் போது முகம் சுளிக்கிறான். உண்மைகளுக்கு சம்பந்தம் கேட்கிறான். உண்மைகளுக்கு சம்பந்தங்கள் தேவையில்லை. சம்பந்தங்கள் இல்லாமல் ஆரம்ப வரிகளை அடுக்கவில்லை கவிஞர். அவையனைத்தும் உண்மையெனும் ஒரு சம்பந்தம் போதுமானது.
உண்மை சுடும். அது உணரப்படும்போது, தலையில் தானாகவே உரைக்கும். உண்மை, இலவசக் கேசக்குளியல் திரவத்தோடு, பளபளா நெகிழிப்பைகளில் பதினைந்து ரூபாய்க்கு கிடைக்காது. உண்மையை தேடித்தெளிய வேண்டும். இந்தக் கவிதை உண்மை பேசுகிறது.
காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளைக் காண, கட்டணம் போட்டு , பெட்டியை நிறைக்கின்றனர் போலி(ஆ)சாமிகள்.
காலை தொட்டு, கருவறைக்குள்ளிருக்கும் தெய்வத்தைப் போற்றி விட்டு, கருக்கல் அடைந்ததும், கன்னி வேட்டையில் இறங்கி , கரு கொடுக்கின்றனர், ஆன்மீகப்பேரொளிகள். முகங்கள், இவர்களை நோக்கி சுளிக்கப்படவேண்டும்.
கல்வித்தந்தை என்றும், பாமரர்களின் கண் திறந்த கோமான் என்றும், மேடைதோறும், பொன்னாடைகளும், புகழாரங்களும், பெற்றுக்கொள்ளும் பொதுவாழ்வுச்செம்மல்கள்தான், தன் பால்வாடிப் பள்ளியில் , பத்தாயிரம் முன்கட்டணம் வசூலிக்கும் இருவாழ்வு வாழ்கின்றனர். முகங்கள், இவர்களை நோக்கி சுளிக்கப்பட வேண்டும்.
கர்வக்கொழுப்பெடுத்து, தன் கருத்தே நியாயமென்று, உண்மைகளை, விளம்பரதாரர்களின் தன்மைக்கேற்றவாறு மாற்றி, கட்சிக்காக கண்டதையும், தொலைக்காட்சி மூலமாக நடுவீட்டில் கக்கும் , ஊடக முதலாளிகளை நோக்கி சுளிக்கப்படவேண்டும் முகங்கள்.
காசே கருத்தென்று, வட்டியின் குட்டிக்கு வட்டி போட்டு, கட்டப்பஞ்சாயத்து செய்த, மலக்காட்டு முன்னாள் ரவுடிகள், இந்நாள் மந்திரிகளாய், மரிக்கொழுந்து பாத்தியாம், ஜனநாயகக்கோயிலில் வேட்டி உருவுகின்றனர். முகங்கள், இவர்களை நோக்கி சுளிக்கப்பட வேண்டும்.
ஒருவழியாக, உண்மை உணர்ந்து சுளிக்கத்துவங்கும் முகங்களும், இலவச மடிக்கணினி, மலிவு விலை சாரயமெனும் போலிகள் கண்டு மலர்ந்து விடுகின்றன. உண்மை மீண்டும் ஓரங்கட்டப்படுகிறது.
உலகத்தை உழுத ஆண்டவன், காணாமல் போய்விட்டான். மாடாடு கோழிகளாய் அலையும் மனிதர்கள், போலிகளை நம்பி சூராளம் அடித்துக்கொண்டிருக்கிறோம். ஆயினும், உண்மை மறைவதில்லை. ஆற்றுக்கு அணையிடலாம், காற்றுக்கு முடியாது. ஆயிரம் தடை கடந்து, இரும்பொத்த கரும்பாறைகள் உடைத்து ஊற்று நீராய் ஒரு நாள் வெளிப்படும் உண்மைகள், உப்புக்கரிப்பதில்லை.
இக்கவிதை கருத்துகளை பிரசவிக்கவில்லை , நரியனூர் ரங்கு அவர்களே, உண்மைகளை பிரசவித்திருக்கிறது. கர்வம் கொள்கிறேன், நீர் கவிஞனென்று!!.
கவிதை எண் - 190523
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
