வழி தேடி
என்ன எழுதுவது?
எதற்கு எழுதுவது?
யாருக்காய் எழுதுவது?
என்ன சொல்வதற்காய் எழுதுவது?
ஆயிரம் பௌர்ணமிகள்
ஆரவாரமில்லாமல் வந்து போகலாம்!
நடுநிசி இரவுகளிலும்
பிரம்மமுகூர்த்த காலையிலும்
ஞானம் தேடி புறப்படலாம்!
கேள்விகள் பதினாயிரம்
எளிதாய் கேட்டுவிடலாம்!
அதற்கு பதில் தேடி
பாதை வகுப்பதற்குள்
படாதா பாடுபட்டு
பகல் இரவுகளைத்
தொலைத்து தலைமுடிகள்
இலவம் பஞ்சாய்!
தன்மானம் இழந்து
தள்ளாடும் கால்களுடன்
தசைநார்கள் தளர்ந்து
தவிடு பொடியாய்!
பொக்கை வாய்க்குள்
சிரிப்பு கூட சிறிதளவும்
மிஞ்சாது!
சொல்லவந்ததை சொல்லாமல்
எழுத நினைத்ததை எழுதாமல்
வழிதேடும் வாழ்க்கைக்கு
அர்த்தமும் புரியாமால்
கடைசி வரை கால் போன
போக்கிலே பயணம்!
விழி பேசும் வார்த்தைக்கு
விளக்கம் சொல்லாமலே!
விடியாமல் போன இரவுகளும்
தொடராமல் போன உறவுகளும்
இடம் மாறி தடம் மாறி
தட்டுத் தடுமாறுகின்றன
திசை தெரியா அம்புலியாய்
வழி தேடி.................!
........................சஹானா தாஸ்!