வாழ்ந்து பார்க்கிறேன் வையத்தில்
எட்டிப்பார்க்கிறது குட்டி நிலவொன்று
சுட்டித்தனம் தெரிகிறது பார்வையில் !
வெட்டிடும் மின்னலாய் புன்னகை இங்கு
கட்டிப் போடுகிறது தளிரின் களையிங்கு !
சிரித்திடும் காரணம் சிந்தையில் பட்டது
விரிந்த நெஞ்சில் விதைகளை தூவியது !
பிரிந்தே உள்ளனரே இங்குஎன் முன்னோரே
வரிந்து கட்டுவதேன் எனக்கு முன்னாலே !
கருவறையில் அறிவீரா சாதியும் மதமும்
எருவானபின் சிந்திப்பீர் எதனை நீங்களும் !
உருவானபின் தானே ஊரும் உறவுகளும்
தருவான பின்தானே புரியும் உங்களுக்கும் !
பணம்தானே பிரிக்கிறது உங்களை என்றும்
பாசமும் மறக்கிறதே நேசமும் மறைகிறதே !
இனமொழி உணர்வு இல்லாமல் போனதேன்
இடையில் ஒருமொழி ஓங்கியே நிற்பதேன் !
அடிமையில் மீண்டு சுதந்திரத்தை சுவாசித்தோம்
அரசியலில் சிக்குண்டு மீண்டும் யாசிக்கிறோம் !
அடுத்தவர் நலனை நினைப்பதும் யார் இங்கே
அடுத்தவர் மனமகிழ உதவுவதும் எவர் இங்கே !
இல்லாமை வருந்துகிறது இருப்போரை பார்த்து
கல்லாமை ஏங்குகிறது கற்றோரைப் பார்த்து !
பொல்லாமை நடிக்கிறது நல்லோரை பார்த்து
இயலாமை தடுமாறுகிறது இவ்வுலகைப் பார்த்து !
பிறந்ததை நினைத்து நானும் சிரிக்கிறேன்
பாரினில் நடப்பதை பார்த்து சிரிக்கிறேன் !
மறுபடியும் பிறக்குமா மனிதமென சிரிக்கிறேன்
மாற்றமும் நிகழுமா என்றெண்ணி சிரிக்கிறேன் !
சாதியும் மதமும் பிரிப்பதை எண்ணி சிரிக்கிறேன்
சதிவிதி என்று சலிப்போரைக் கண்டு சிரிக்கிறேன்
வன்முறை வளர்ப்போரை கண்டும் சிரிக்கிறேன்
நன்முறை நலிந்ததை எண்ணியே சிரிக்கிறேன் !
வாழ்ந்துதான் பார்க்கிறேன் வையத்தில் நானும்
மாற்றிடவும் முயல்வேன் முடிந்தவரை என்னால்
பழனி குமார்