அந்த ஒரு நாள்

அந்த ஒரு நாள்

அது ஒரு சனிக்கிழமை இரவு !!! விடியல் பற்றி முன் திட்டம் இல்லாமல் ரசித்து தூங்ககூடிய அற்புத இரவு !!! வெள்ளிக்கிழமை அலுவல் வேளையிலும் அடுத்த நாள் கிளம்பும் மனநிலையை எண்ணி ஏங்க வைக்கும் இரவு, போட்டுவைத்த ஞாயிற்றுக்கிழமை திட்டங்களை மனதில் ஒத்திகை பார்த்து மகிழும் இரவு !!!

இன்னும் இப்படியான பல கனவுகளையும் சந்தோசங்களையும் உள்ளடக்கிய அந்த நாளில் கமலேஷின் சந்தோசம் இரட்டிப்பாகவே இருந்தது இல்லை இருபது மடங்கு இருந்தது எனலாம். ஆம் அன்றைய தினம் , . . . .

காலையில் அவசரமாக விரைந்துகொண்டிருக்கையில் பஸ்ஸை தவறவிட்ட ஒரு பள்ளி மாணவனுக்கு, நேரமானதையும் பொருட்படுத்தாமல் லிப்ட் கொடுத்து அவனுக்கு உதவியபோது உள்ளத்திலிருந்து சொன்ன அவன் நன்றியில் கிடைத்த மனநிறைவோ!!

அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சம்பள உயர்வு நிலுவைத்தொகை மொத்தமாக செட்டில்மெண்ட் ஆகிவிட்டது என்ற பணநெருக்கடி நீக்கிய இன்பச் செய்தியோ!!!

அவனின் ஆருயிர் அக்காமகள் அதுல்யா இவன் சொல்லிக்கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பிவித்ததால் பேச்சுப்போட்டியில் LKG யிலே முதல் பரிசு வாங்கிவிட்டதாகவும் சீக்கிரம் பரிசு வாங்கி வரச்சொல்லி செல்போனில் ஆர்ப்பரித்த மழலைக்கொஞ்சல் மனதில் நிறைந்துபோனதாலோ!!! இல்லை

எப்பவுமே அளந்து பேசி இவன் இம்சைக்கு இரையாகிப்போன பரிதி இதோ இன்று மனம் திறந்து பேசினதோ!!!

ஆம் அலுவல் பணிகளை அவசரமாய் முடித்து அவளைக்காண அரை மணிநேரம் முன்னதாகவே சென்றிருந்தான் அவளும் தனக்கு வைத்திருந்த மாதிரித்தேர்வை ஒரு மாதிரி முடித்து இவன் வரவுக்காக காத்திருந்தாள்

எப்பவும் இவர்கள் செல்லும் ஒரு நடுத்தர ஹோட்டலுக்கு சென்றனர் பழக்கம் காரணமாக முகச்சுழிப்போ புன்முருவலோ இல்லாமல் சாதாரணமாக புன்னகை தூவி உபசரிப்பை ஏற்று இவர்களுக்காக உயிர்துறந்து காதலர்கள் மெய் தாங்க விரிந்திருந்த அந்த மர நாற்காலியில் உடல் புதைத்து மனம் திறந்தனர் இடத்திற்கு காணிக்கையாக எதையோ ஆர்டர் செய்து விட்டு . . .

அன்று பரிதி நிறைய பேசினாள், உருகினாள், உருக்குலைந்தாள், காதல் சமையல் காமம் இல்லாமல் பரிமாறப்பட்டது நெகிழ்ந்து நிறைந்தான் கமலேஷ் . . . ஒவ்வொரு சொல்லும் மனப்பாடம் செய்யாமல் மனம் பாடம் செய்தது அந்த காதல் தருணத்தை துறக்கமுடியாமல் காதல்மனதோடு அவளை பஸ்டேண்டில் விட்டு விட்டு, அக்கா மகளை காண ஆசையோடு ஓடிவந்தான் அவளுக்கு கலரிங் புக்கும் கலர் பென்சில் பாக்ஸும் வாங்கிக்கொண்டு அவனின் வசந்தமாளிகைக்கு

இப்படியாக அந்த நாளை யாரோ அவனுக்காக பார்த்து பார்த்து செய்ததுபோல் இருந்தது

அவனுடைய சந்தோசம் சுற்றத்தையும் ஒட்டிக்கொண்டு அவனது குடும்பமும் குதூகலித்திருந்தது, அணையப்போகிற விளக்கு பிரகாசமாக எரியுமே அந்த மாதிரி அது அவனது வாழ்வின் கடைசி நாள் என அறியாமல் பிரகாசித்துக்கொண்டிருந்தான் உலகிலேயே பிரதான சந்தோசியாக ......

அன்று இரவு பூரி செய்து இருந்தார்கள் எப்பவுமே இறுதியாக சாப்பிடும் அம்மா, அடம்பிடிக்கும் அதுல்யாவை மாடிக்கு எடுத்துச்சென்று நிலாச்சோறு ஊட்டி வரும் அக்கா, இரவு பதினோறு மணிக்கு வந்தாலே நேரமாக வந்துவிட்டதாக நினைக்கும் மாமா, சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்று ஒவ்வொருமுறை சாப்பிடும்போதும் ஏங்கும் அப்பா, சாப்பாட்டை சடங்கிற்காகவே உள்ளே தள்ளும் தாத்தா, என குடும்பம் அனைத்தும் சுற்றி அமர்ந்து பேசி சிரித்தபடி மகிழ்வான ஒரு இரவு உணவு ஆர்பாட்டத்துடன் அரங்கேறியது அதுல்யாவும் பூரி என்பதால் அடம்பிடிக்காமல் அவனுக்கு அருகில் அமர்ந்து பூரியுடன் சண்டையிட்டு விழுங்கி கொண்டிருந்தாள். அவனும் மகிழ்ச்சியில் மனம் நிறைந்தாலும் பதினாறு பூரி கொண்டுதான் வயிற்றை நிரப்பினான்

பின் சுட்டி அதுல்யாவின் பள்ளியில் நடந்த கெட்டிக்காரபேச்சின் மறு ஒளிபரப்பும், டிவியில் பாடல் ஒளி(லி)பரப்பவிட்டு அவளின் அட்டகாச நடனநிகழ்ச்சியும் நடந்துகொண்டிருந்தது சிறிது நேரத்தில் அதுல்யாவுக்கு தூக்கம் வரவே மாமாவின் மடியில் படுத்து கதை கேட்டுக்கொண்டே அடுத்த நாள் அவனுடன் விளையாடப்போகும் தருணத்தை தனது மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்து கண்ணுறங்கினாள்

அவளுக்கும் அவனுக்கும் ஞாயிறு என்பது வேற்று உலகத்திற்கு உலாவச்செல்லும் ஒரு அற்புத நாளாகவே இருந்தது அவனுடைய ஞாயிற்றுக்கிழமையின் அரைதினத்தில் யாராலும் அவனை தொடர்பு கொள்ளவே முடியாது கைப்பேசியையும் துறந்து, காதலியையும் மறந்து குட்டி அதுல்யாவுடன் தானும் ஒரு குழந்தையாக குலாவி இருப்பான். . . அது ஒரு அழகிய பூங்கா அதில் இருவரும் பட்டாம்பூச்சியாய் ஓடுயாடி விளையாடுவதும், ஒளிந்து விளையாடுவதும், மாறி மாறி கதை புனைந்து ஆச்சர்யமடைவதும் கொண்டு சென்ற தீனிகளை அங்கிருக்கும் யாசகப் பெரியவர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு அவர்களுடன் பேசிச்சிரித்து திரும்பி வருவதையும் பற்றி பரிதியிடம் இவன் மெய்மறந்து பேசும்போது அதுல்யாவிடம் அவளுக்கு பொறாமை வராமலில்லை

அப்படியான அந்த ஞாயிறைப்பற்றி மனதில் எண்ணிக்கொண்டு வழக்கமான விளையாட்டுகள் இல்லாமல் புதிதாக சில விளையாட்டுகளை யோசித்துவாறு தானும் படுக்கச்சென்றான்... பரிதிக்கு பொறாமை துளிர்விட்டதோ என்னவோ! தன் அன்பைக்கொண்ட அவளது அழைப்பு வந்தது அழைபேசியில் சிந்தனை கலைந்து! காதலில் விழுந்தான் கமலேஷ் அன்றைய உரையாடல் அவ்வளவு ஆத்மார்த்தமாக இருந்தது வயிறும் மனமும் நிறைந்ததால் விருப்பமின்றி தூங்கிப்போனான் அவன் . . . . . . . .

அடுத்த நாள் காலை சூரிய தினம் ஆனால் ஒளியறியாமல் இருந்தது அவன் விழிகள் . . . . . . .

வழக்கமான வேலைகள் நடந்தேறின காலை பத்து மணிக்குமேல் ஆகியும் உறங்கி கொண்டிருந்தான் கமலேஷ் அதுல்யா எப்பொழுதும்போல அவனை எழுப்பும் முயற்சியில் ஆழ்ந்து கொண்டிருந்தாள்.. மற்றவர்கள் அவரவரின் வேலைகளை பார்ப்பதிலேயே முனைப்பாக இருந்தனர் அதுல்யா அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது என்று அவளது திருப்பணியில் தலையிடாமல் இருந்தனர். அதற்காகவாவது கமலேஷின் தூக்கம் பயன்படுவது எண்ணி அகமகிழ்ந்து அவனை துயிலெழுப்பாமல் விட்டிருந்தனர் . . . . . .

அவளால் முடியாது என்ற முடிவுக்கு வந்ததால் உதவியை நாடி நேராக ஹாலுக்கு சென்று அப்பாவை அழைத்தாள். விடுடா குட்டி அவனாவது நிம்மதியா தூங்கட்டும் எல்லாம் கல்யாணம் ஆகும் வரைதான் அப்புறமெல்லாம் தூங்க முடியாதுடா என்று தன் மனைவியை பார்த்தவாறே நையாண்டி செய்தார். அலமாரிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தவள் செல்லமாக முறைக்க என்ன மாப்பிள்ளை செய்வது நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான் என தனது மருமகனுக்கு சாதகமாக மகளையும் மனைவியும் பார்த்து சிரித்தவாறே வெளியே சென்றார் அதுல்யாவின் தாத்தா. ஆமாம் மாமா சரியா சொன்னீங்க என்று நகைத்தவாறே புத்தகத்தில் புதைந்தார்.
உறவுகள் இல்லாமல் தவித்திருந்தவருக்கு மனைவியால் கிடைத்த உறவுகளுடன் ஒன்றிப்போயிருந்ததால் அவர்களை மிகவும் நேசித்து கிண்டலும் கேலியும் உரிமையுடன் செய்வது அவரது வாடிக்கையாகியிருந்தது . . .
ஒருவழியாக அனைவரின் வேலையும் முடித்துவிட்டுருந்தனர் சாப்பாட்டு நேரம் வந்த்தால் கமலேஷை எழுப்ப எத்தணித்தார் அவனது தாயார்.. ஆனாலும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது அம்மா தன்னை உசுப்பிக் கொண்டிருக்கிறார் என்று உணர்ந்தும் உடலை அசைக்க முடியாமல் உணர்வற்று பாராமாக இருந்தது அவனது உடல் கண்ணை அவனால் திறக்க முடியவில்லை.. விலகியிருந்து அவனது உடலை கண்டு திடுக்கிட்டான். அனைவரும் சுற்றி அனைது உடலை ஏதேதோ செய்தும் அவனால் எதும் செய்ய முடியால் திக்கித்துக்கொண்டிருந்தான் . . .
உண்மை உணர்ந்து உடலை ஹாலில் கிடைத்தியிருந்தனர். சோகத்தை உட்கொண்டு செரித்ததால் அனைவரும் கண்ணீரை கழித்துக்கொண்டிருந்தனர் அதுல்யாவும் எதுவும் அறியாமல் அவனது உடலை வருடியவாரே அமைதியாய் அவனது கையைக் கட்டிக்கொண்டு கண்சொரிகியிருந்தாள். அவளை முன்னிறித்தியே அவளுடன் அவன் கொண்டிருந்த பாசப்பிணைப்பினை எண்ணி அது தொலைந்துவிட்ட அந்த சிறுமியின் ஏக்கத்தை பாடியே தங்களின் அழுகையை வெளிப்படுத்தி ஏனைய உறவுகள் ஒப்பாரித்துக்கொண்டிருந்தது.
தனது அன்னையை உற்று நோக்கினான் கமலேஷ் அவர் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தார் ஆனாலும் அதில் ஒரு அமைதியை உணர்ந்தான் அவன் எதிலும் நிலைபாடில்லாமலும் வாழ்க்கையை விளையாட்டாக பார்ப்பதாலும் எங்கு இவன் வாழ்க்கையில் துன்பத்தில் தவிக்க போகிறான் என்ற எண்ணம் அவருள் நீண்டு இருந்தது அதற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாய் அவன் எண்ணியதே அந்த அமைதி உணர காரணமாய் அமைந்தது
செய்தி அறிந்து விரைந்து வந்தும் உரிமையற்று ஓரமாய் ஒடிந்து நின்றிருந்தாள் பரிதி. கையால் அணைகட்டி வாயை அடைத்து பொங்கி வந்த தனது சோகத்தை அடக்கிக்கொண்டிருந்தாள் அதற்குமேல் பொருக்கமுடியாமல் தனிமை தேடி ஓடினாள் அவளது அழுகை அவனது ஆன்மாவை கொத்தியிழுத்தது
அதுல்யாவை ஒருமுறை பார்த்தான் அவள் அமைதியாய் கண் சொரிகியிருந்தாள் எனவே பரிதியின் பின் பறந்தான் அவள் தனது அறையில் விக்கித்து பிதற்றிக்கொண்டிருந்தாள் அவளது அருகில் இருந்து அவளது எண்ணம் கோனாத ஒரு அலைவரிசை உருவாக்கினான் களைத்து அவள் கண்மூடிய தருணம் அதுல்யாவிற்கு இன்னும் உணவு தந்தார்களா என்ற எண்ணம் துளிர்க்கவே உடைந்து விரைந்தான் ஆனால் அனைவரும் இடுகாட்டில் இருந்தனர்
அங்கே அவனது உடல் தகணம் செய்யப்பட்டு தகித்துக்கொண்டிருந்தது அதைப் பார்த்ததும் அவனுக்கு என்னமோ செய்தது. மிகவும் பயந்தான் நெஞ்சம் அடைப்பதாய் உணர்ந்தான் உடலின் எடை இலகியது பயங்கரமாக வியர்த்தது. யாரோ தன்மேல் ஏறி குதிப்பதாய் உணர்ந்தான் .தனது செவி உணர்வதை உற்றுக் கவனித்தான் . . . . ஆம் வீடுகூட்டிக் கொண்டிருந்த அவன் தாயார் அவனை வசைபாடிக்கொண்டிருந்தார் மணிப் பத்தாச்சு ஞாயிற்றுக்கிழமைனு நினைப்பா இன்னைக்கு சனிக்கிழமை இன்னும் எந்திருச்சராத அப்பறம் ஆஃபிஷ் போகும்போது சாப்படமா கூட ஓடு என்றவாறே வெளியே சென்றார் .
திடுக்கிட்டு எழுந்தவனைப்பார்த்து சிரித்தவாறே ஏன் மாமா வேர்வை மழையில் நனைஞ்சுட்டயானு கேட்டாள் அதுல்யா. நினைவுக்கு வந்தவனாய் கனவை நினைத்து ச்சே என்றான் . . அதுல்யாவை ஒரு கையிலும் தனது கைப்பேசி ஒரு கையிலும் எடுத்தவாறு வெளியே வந்தான் . . குறுஞ்செய்தியின் வாயிலாக தன்னால் இன்று வெளியே வரமுடியாது தேர்வு இருக்கிறது என்று மறுப்புச் செய்தியை அனுப்பியிருந்தாள் பரிதி . . ஏமாற்றத்துடன் எந்திரனாய் அலுவலகம் கிளம்பினான்.. சாயங்காலம் வந்து பேச்சுபோட்டிக்கு எழுதி தரண்டா தங்கம்னு அதுல்யாவுக்கு முத்தமிட்டபடி அவசரமாய் தனது வண்டியில் விரைந்தான் எதிரில் கல்லூரி மாணவன் ஒருவன் கை காட்டுவதையும் சட்டை செய்யாமல் அலுவலகத்தை நோக்கி . அங்கே சம்பள நிலுவை தவணை முறையில் பிரித்தளிக்கப்படும் என்ற செய்தி வரவே தன்னுள் சிரித்துக்கொண்டான் அந்த ஒரு நாள் இன்னும் வரவில்லை என்று . . . .



- தாமரைச்செல்வன்

எழுதியவர் : தாமரைச்செல்வன் (20-May-14, 4:39 pm)
Tanglish : antha oru naal
பார்வை : 312

மேலே