தப்பாகும் கணக்குகள்

ஜீவித கணிப்பில்
எண்ணிக்கைகள் இன்றியமையாதது
ஒன்று தனித்திருந்திருதால்
ஒன்றும் ஆகியிருக்காது

இரண்டு எண்ணிக்கைகளால்தான்
மூன்றாவதாய் ஒன்று
முளைக்க வேண்டியிருக்கிறது

அதிகமானவர்கள்
அவரவர் வசதிக்கேற்ப கணக்கை
தப்பானாலும் சரியாக
போட்டு விட வேண்டும் என்பதில்தான்
சளைக்காமல் அலைகிறார்கள்

சிலரோ பிணக்குகள் வரவேண்டும் என்றே
தவறான கணக்குகளை தருவிக்கின்றனர்
எப்படி கூட்டினாலும்
ஒன்று கழிபட்டுப் போகிறது
அந்நொடியே பிசகு நேர
கணக்கு பிழைத்து விடுகிறது

வேறு சிலரோ
கணக்குகள் விடுவதற்கென்றே
கணக்குகள் செய்கிறார்கள்
நாம் எழுதி விடும் எண்கள்தானே
எப்படியாவது போட்டு
கணக்கை பெருக்கி விடுவோம்
என எத்தணிக்கிற போது
பொதுவாய் கணக்கு
பொய்த்து விடுகிறது

பிரித்து விடு அல்லது கழித்து விடுவென
எண்கள் எப்போதும்
கேட்டதில்லை கணக்கு போடுபவனை
குறுக்கும் நெடுக்குமாய் அவன் நிறுவும்
குறியீடுகள்தான் குறுக்கறுத்து
அடைவை எத்தமுடியாது பிழைத்து
அநியாய கணக்காகிறது

எல்லோரையும் மிஞ்சி விட்டு
இறுதியாய் யாராலும்
கணித்து விட முடியாத
பெரும் கணக்கொன்றை
காலம் போட்டு விடுகிறது
கூட்டினாலும்,கழித்தாலும்
பெருக்கினாலும்,பிரித்தாலும்
பூச்சியம் வரும் படியான
ஒரு புதிர் கணக்கை.


ரோஷான் ஏ.ஜிப்ரி -இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி -இலங்கை. (21-May-14, 5:31 pm)
பார்வை : 145

மேலே