மகாநடிகன்

பேசு
பேசிக்கொண்டிரு
உமது பேச்சு
மகத்துவம் மிக்கதாய்
இருக்கும்படி பேசு

முத்தமிடு
முத்தமிடுகையில்
உதடுகளில் எதுவும்
ஒட்டாதபடிக்கு
முத்தமிடு

கட்டித்தழுவு
தழுவும் போதே
தள்ளும் செயலும்
அரங்கேற்றம் காணட்டும்
அரங்கேற்றம் மட்டும்
கண்கள் அறியாவண்ணம்
கட்டித்தழுவு

கண்ணீர் விடு
ஆன்மா உருக
குரல் நடுங்க
பதறி துடிப்பதாய்
நினைக்கும்படி
கண்ணீர் விடு

எல்லாம் என்னிடம்
இருந்தும் நீதான்
நானெனச் சொல்
உன்னைவிட உன்னைவிட
உலகத்தில் உசந்தது
பாட்டும் பாடு
நீயே நான் என்பதில்
அவனை அழி
நான் நீயென
பார்க்கப் பழக்கு

நடிகனாவாய்
இல்லை
நம்தேசத்தில்
ஆள்பவனாவாய்
மகாநடிகன்
மாமன்னன்.

எழுதியவர் : க.இராமஜெயம் (21-May-14, 11:16 pm)
சேர்த்தது : Ramajayam
பார்வை : 99

மேலே