மீளாத நிசியில் வரும் கனா
பின்னிருந்து வந்து தன் கைகளால்
சட்டென நம் கண்களை மூடி
யாரென யூகிக்க சொல்லும்
தோழியின் முதல் அறிமுகம்!
வெட்கமும் நாணமும் எப்போதும்
நட்புக்கும் இருக்கும்
முதல் சந்திப்பில்..
முகம் சிவந்து போகும்;
கண்கள் சிரிக்கும்.
எவ்வளவோ முயற்சித்தும்
இதழில் சிரிப்பு வர மறுக்கும்..
கைகளின் குலுக்கல் பெரும்பாலும்
பதட்டத்தில் வியர்வையின்
ஈரத்தால் துவட்டப்பட்டிருக்கும்..
யாரிடமும் சொல்லாதே
என்றுதான் பெரும்பாலும்
சொல்லப்படுகின்றன ரகசியங்கள்..
கசிந்து உடைந்துபோகும் மறுநாளில்
சத்தியமா நான் சொல்லலடா
என்று பொய் சொல்லி ரசிக்கும்
நட்பின் கோபத்தை..
ஏதுமற்ற சந்தர்ப்பங்களில்
எல்லாமுமாய் இருக்கும்
நண்பனின் அறிமுகம்!
கல்லூரி விண்ணப்பத்தை
நிரப்புகையில் தான்
உன்னைப் பார்த்து
எழுதத் தொடங்குகிறது மனம்..
நம்முள் நட்பெனும்
முடிவற்ற புத்தகத்தின்
முதல் எழுத்தினை
பிள்ளையார் சுழியிட்டு..
தோள்பற்றி புன்னகைத்த
நண்பனின் முதல் சந்திப்பு
தினமும் திரள்கிறது
ஏதேனுமொரு தருணத்தில்..
பகலில்லா இரவுகள் போல
கொண்டாடிய பிறந்தநாள்..
விழியிரவில் நுழைந்து தூங்கிய
வகுப்பறையின் பகல் பொழுதுகள்..
தோழனின் தோள்களில்
சாய்ந்திருந்த நேரம்
சீக்கிரமே முடிந்து விட்டதாய்
மெல்லவே காட்டுகிறது மனக்கடிகாரம்..
பின்னாளில் நினைத்து பார்க்கையில்
அப்போதைக்கு சிறு புன்னகை உதிர்த்து
பெரிதாய் சிரித்த நாட்களை
நினைத்து பார்க்க தோன்றும்..
தூரத்திலும் நெருக்கம் தேடுகின்ற
படர்ந்திருக்கும் கொடிகளைப்போல
பசுமையாகவே இருக்கும் நட்பு
என்றைக்கும் வலி(மை)யானது…