தேவதைத் திருநாள்

ஒரு பண்டிகை நாளாய்ப் பார்த்து
உன் வீதியில் திரிந்துக் கொண்டிருந்தேன்.
என் புத்தாடையை
உன் புத்தாடையிடம் காண்பிக்க
அப்படியொரு ஆர்வம்.
உன் வீட்டு வாசலின் கோலம்
அதை உன் பாட்டிக்கூட போட்டிருக்கலாம்..
ஆனாலும் எனக்கு
அது நீதான் போட்டிருக்கிறாய்.
எதிர் வீட்டுத் திண்ணை பாட்டியின் நலன்
இது போன்ற நேரங்களில் தான்
எவ்வளவு முக்கியமாய்ப் போய்விடுகிறது..
எப்படியோ ஒரு எதேச்சையை உருவாக்கி
உன் கண்ணில் பட்டுவிட்டேன்..
நீ முற்றத்தில் அடுப்பு மூட்டி
‘சமைக்கிறேன் பேர்வழி’யாய் அலட்டத்துவங்கினாய்.
உன் சிவப்பு நிறத் தாவணிக்கும்,
வெள்ளை நிற மல்லிகைக்கும்
அப்படியொரு போட்டி. யார்? உன்னை அதிகமாய்
அழகுபடுத்திக்கொண்டிருப்பதென்று..
நான் என் கண்களையும்
போட்டியில் சேர்த்துக் கொள்ளச்சொல்லி
கெஞ்ச தொடங்கிவிட்டேன்...

எழுதியவர் : சங்கீதன் (1-Jun-14, 7:37 pm)
சேர்த்தது : சங்கீதன்
பார்வை : 85

மேலே