மரித்துவிட்டேன் மார்போரோ
மரித்துவிட்டேன் மார்போரோ ! - சி . அருள்மதி
உயிர்க்காற்று
உறிஞ்ச மறுத்து
மரணக் காற்றை
உள்ளிழுக்கும்
எம நாசிகள் !
ஆயுளை அரித்துத்தின்னும்
புகைக்கறையான்கள் !
நுரையீரல் பஞ்சைப்
பற்றவைக்கும்
குச்சித் தீ !
காற்றில் ஓவியமாய்
புகை வளையங்கள் -
உயிரைச் சிறைவைக்கும்
காலனின் கைவிலங்குகள் !
வாலிபப்பருவத்தை
வயோதிகமாக்கும்
காகித ‘வயாக்ரா’.!!
விடம் கக்கும் புகைப் பாம்பு
புற்று வைக்கும் வாயுறுப்பில் !
அறுசுவை விருந்தை
அலட்சியபடுத்திவிட்டு
குப்பைமேட்டில் நின்று கொண்டு
கூலத்தைப் புசிப்பதென்ன ?
உதட்டுக்கு ‘கருஞ்சாயம்’ பூச
வாங்கிவந்த ‘வெள்ளை குச்சி’ !
நிகோடின் புகையால்
நித்தம் கசியும் உயிர்கள் !
சாராய கள்ளுக்குடி குடித்தனத்தில்
பங்குபோட்ட ‘புகைச்சக்காளத்தி’ !
காற்றில்லா சுவாசம் செய்ய
கற்றுக்கொடுங்கள் பிஞ்சுத் தலைமுறைக்கு
இல்லையெனில் மாரடைப்பு வந்துவிடும்
மலரப்போகும் மொட்டுகளுக்கு !
ஆக்சிஜென் செல்களை
அழித்தொழிக்கும்
செங்கல் சூளையாய்
மாறிவிட்ட நுரையீரல்கள் !
சுவாசப் பாதையில் புகுந்து கொண்ட
மரண முகில் ! - அவை
இரத்த நாளங்களில் பொழிவது
விஷ மழை !
என் அப்பன் ஒரு சங்கிலி புகைப்பான்
அண்ணனுக்கு நிமோனியாவும்
அக்காவுக்கு பிராங்கைட்டீசும்
உயிலாய் எழுதிச் சென்றான் !
உயிருடன் இருக்கும்போதே
வாய்க்கொல்லி வைத்துக்கொண்டான் !
இழுக்கும் ஒவ்வொரு இழுப்பிலும்
வாழ்வின் பதினோரு நிமிடங்கள் பறிபோயின
இந்த கொள்ளிவாய் பிசாசிடம் !
வளரும் நாட்டில் பசிக்கு உணவில்லை என்றால்
புகைக்க ஒரு பிடி சுருட்டா ?
ஆண்மை பெற ஆண்களும்
துடியிடை பெற பெண்களும்
புகைக்க வேண்டும் என்று சொன்ன மூடர்கள்
என் உயிர் கழனிகளில்
விதைத்தது விஷ முட்கள் !
கோடியில் வருமானம் -
இந்தப் புதைகுழி காளானால் !
பிணமாகும் தலைமுறையின்
உயிர் விலை இதுதானா ? ??????
மே 31 (Anti Tobacco Day ) தினத்தன்று எழுதியது ! படித்துவிட்டு கண்டிப்பாக இந்தக் கவிதையை பகிரவும் ! புகைக்கும் இதயங்கள் புண்படாமல் இருக்க உதவுங்கள் !