சும்மா கிடந்த சொற்கள் - கே-எஸ்-கலை

ஈர்க்கும் மழையாக
இதயத்துள் தினந்தூறும் !
வேர்க்கும் வெயிலாக
வீட்டுக்குள் விளையாடும் !
கார்க்கூந்தல் மீதமர்ந்து
காரிகையின் துதிப்பாடும் !
போர்வீரன் நெஞ்சமர்ந்து
பேரிகையாய் விதிப்போடும் !
ஏர்கொண்ட உழவனுக்கு
ஏற்றம் தினம்கோரும் !
வீர்க்கொண்ட வித்துகளின்
விலாசமாய் வீற்றிருக்கும் !
பார்மணக்கும் பூக்களுக்கு
பாமாலை தலைச்சூட்டும் !
தூர்மணக்கும் மூலிகைக்கு
துகிலுடுத்திச் சீராட்டும் !
வேர்க்கும் தொழிலாளி
வேதனைகள் சொல்லியழும் !
யார்க்கும் தீங்கானோர்
யமனோடு சேர்த்துவைக்கும் !
தீர்க்கம் பலசொல்லி
தீமைகளை வேரறுக்கும் !
கூர்வாளைத் தோற்கடித்துக்
களமாடிக் களையெடுக்கும் !
மூர்க்கத்தின் முதுகிலேறி
முரண்பாடு இறக்கிவரும் !
வர்க்கம்பல வர்க்கம்என
வாதாட்டம் வளர்த்தெடுக்கும் !
தர்க்கம்பல நெஞ்சுக்குள்
தன்னிச்சையாய்ச் செய்யும் !
சொர்க்கம்வரை கூட்டிப்போய்
சொக்கிப்போக லீலைச்செய்யும் !
கோர்க்கும் எழுத்தாணி
கொக்கியிட்டு இழுத்தெடுத்து-
சேர்க்கும்வரை இவையாவும்
சும்மா கிடந்த சொற்கள் !
=========================================
(மதிப்பிற்குரிய தோழர் பொள்ளாச்சி அபி அவர்களிடம் கருப்பொருள் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது அவர் கொடுத்த "சும்மா கிடந்த சொற்களை எடுத்து" என்ற வார்த்தையை மையமாக வைத்து எழுதியது)