நாமென்ன நாய்களா

தாயிழந்து வாழும் சிலர்
நாய் வளர்த்து வாழ்ந்திடுவார்
தாய் காட்டும் பரிவுதனை
நாய் காட்டும் என்பதனால்.

வட்டிலிலே வச்ச சோறை
வயிரு முட்ட உண்டதற்கு
உயிரோடு வாழும் வரை
மறவாமல் நன்றி காட்டும்

படித்து வாழும் மாந்தர்
வளர்த்த நாயைக் கற்பதில்லை
கல்வி பயிலாத நாயோ
வளர்ப்பவனைப் படித்திருக்கும்

வளர்த்தவர் இறந்துவிட
வளர்த்தத் தீயில் முடிந்துவிட
நாயின் முகம் வாடிவிட
படுத்தது இடுகாட்டில் தனியாக.

தெரிந்தவர் அழைத்தபோதும்
படுத்தபடி போக மறுத்து
கொடுத்த உணவை வெறுத்து
தன்னுயிரைத் தாரை வார்த்தது.

நன்றிக் கடனாக
தன்னுயிர் தந்த நாய்போல
தரணியில் மனிதனுண்டோ?
நன்றி மறவாமலிருக்க
நாமென்ன நாய்களா!.

எழுதியவர் : கோ.கணபதி (4-Jun-14, 9:50 am)
பார்வை : 69

மேலே