எனக்கு வரமா வந்தவனே, இப்ப மரமா கெடக்குறியே பாகம் - 1
(கண்ணீர் சிந்த, சிந்திக்க முடிந்தவர்களுக்கு மட்டும்... ஒரு தாயின் தால் ஆடுகிறது ஒப்பாரியாக! (பாகங்கள் நான்கில் முதலாவது) - பாகங்கள் முழுவதையும் படியுங்கள், இனி வரும் நாட்களில் )
எனக்கு வரமா வந்தவனே, இப்ப மரமா கெடக்குறியே
நான் சொமந்த மனுஷ கழிவு, வாட உன்ன தீண்ட கூடாதுன்னு
மூணு முற நான் குளிச்சேன், அழும் புள்ள உன்ன தூக்குமுன்ன!
"இந்த வேல வேண்டாம்மா! இது ஆய் ஆய் ஆய்!" ன்னு
தத்துப் பித்துன்னு தத்துவம் நீ சொன்ன, பொறவு சிட்டாளு நான் ஆன.
ஏறு வெயில்ல, தல மேல கல்சொமந்து பல மாடி நான் ஏற,
நீட்டுன கம்பியில பட்டு, சீலயோட கொஞ்சம் தோலும் சிராயும்
அப்படி என் வேர்வ பட்டு, சிமெண்ட்டெல்லம் பலமாச்சு
சொட்டுன ரத்தமெல்லாம் செங்கல்லுல மறஞ்சு தொலஞ்சு போச்சு
இப்படியே நான் வேல செஞ்ச கட்டடம் ஒவ்வொன்னும் ஒசரமாச்சு
ஒடம்பு மெலிஞ்சு, காசு சேக்க ஒவ்வொரு நாளும் உசிருபோச்சு
சாயங்காலம் வேல முடிஞ்சு, கை-கால்-மொகங் கழுவ நான் வந்தா,
மண் மூடின மொகத்துல கூட, நீ கண் மூடித்தனமா முத்தம் கொடுப்ப
நீ அன்னக்கி கட்டுன மணல் வீட்ட, ரொம்ப பெருமயா எனக்கு காட்ட,
ஒடம்ப வருத்தி, வழியற வேர்வ மறந்து, மனசு சிலிர்த்து கண்ணும் வேர்க்கும்!
"என் பையன் என்ஜினியர கட்டபோற மொத கட்டிடத்தில
சிட்டாளா வேல செஞ்சே, என் ஆவி போயிடனும் சாமி!" -ன்னு அப்ப வேண்டிக்கிட்டேன்
இப்படி வரமா வந்தவனே! இப்ப மரமா கெடக்குறியே!
தொடரும்...