காதலா ,கற்பனையா

(ஏக்கம் பெண்களுக்கு மட்டும்தானா இல்லையே)

பூப் பறித்தேன் மாலைசெய்தேன் பூவைக்குச் சூடப்
பொன்னிழையில் கோர்த்துவைத்தேன் புன்னகை காணத்
தோப்பினிலே மாலையிளந் தென்றலும் வீச
தேவியவள் முன்நடந்தேன் சேதியும்கூற
காப்பிருந்த கையணைக்கும் காட்சியுமாகக்
காணொருநாள் கூடுமென்ற கற்பனை வாழத்
தீப்பிடித்த ஆசைகொண்டு தோளிடை சூட்ட தென்றலெனை ஆகிநின்றாள் பூ உதிர்ந்தோட

காற்றினிலே வந்த குரல் கானமும் பாடக்
கண்கள் முன்னே காண் அழகோ ஓவியமாக
விற்றிருந்தாள் வண்ணமலர் பொய்கையும் ஆட
வெற்றிஎன்றே தோன்றியது வேதனை போக
ஈற்றினிலே கண்டவளை என்வசமாக்க
இன்ப உணர்வோடி மனம் இச்சையில் பூக்க
ஏற்றிடுவாய் என்றணைக்க எந்திழை கொள்ள
ஏதுமில்லை நீரில் விழுந் தேன் அலைமேவ

கோவிலிலே நின்றவளைக் கண்டதும் வேண்1டிக்
கொள்ளைஎழில் கோணுமிதழ் கொள்ளெழில் நாடி
ஏவிமனம் காதல்வசம் என்னையும் தள்ள
ஏதெனஏய்த் தென்னையும்ஏ மாற்றுத லென்றே
பாவிமனம் பட்டதுயர் பாரினில் போதும்
பார்த்திடடி ஏந்திழையுன் பட்டெனும் கன்னம்
தாவியதில் கிள்ளிவிட்டேன் தொட்டது கல்லாய்
தேய்ந்துருவில் மாறிநின்றாள் சிற்பமென்றாகி

வெள்ளி மணிப் பொற்சதங்கை விண்ணிடைஆக்கி
வீதியெங்கும் பட்டு விரித் தின்பமும் கூட்டிக்
கொள்ளையெழில் பூநிரவிக் குங்குமம் வாங்கி
கூடிவரும் வேளையிற்செங் கன்னமும் ஆக்கி
வெள்ளைப் பசும் பால்கொதிக்க வைத்தெடுத் தாற்றி
வீடுமனை கூட்டியும் நெய் விட்டகல் ஏற்றி
அள்ளி யணைத் தானந்திக்கும் ஆசையும் கூட்டி
அந்தி வரக்காத்திருந்தேன் அன்பதை ஊற்றி

கள்ளநிலா முற்றத்திலே காய்ந்தெனை வாட்டக்
காணும் எழிற்தென்றல் மணம் கற்பனை சேர்க்க
முள்ளெனவே நோகுமுடல் முப்புரமாக்கி
மூவிழியோன் புன்னகையில் முற்றிலும் தீய்த்த
உள்ளெரிவில் உன் நினைவால் உன்மத்தமாகி
உயிர்துடிக்க வாட்டுவதென் உன்நிழல் கேட்க
கொள்ளைஎழில் கொண்டவளே கங்கையில் மூழ்கிக்
கொள்ளும் சுகம் விட்டெரித்துக் கொல்வதென் கூறாய் !

எழுதியவர் : கிரிகாசன் (7-Jun-14, 10:44 am)
பார்வை : 111

மேலே