உரைக்கிறது பாடமாய் இப்படம்

மலர்ந்திடும் நட்பும் மழலைப் பருவத்திலே
புலர்ந்திடும் பொழுதும் புன்னகை புரிந்திடுமே !
வாசமிகு நட்பும் நேசத்தில் தொடங்கிடுமே
பாசமும் துளிர்விடும் பசுமை நெஞ்சினிலே !
அறியா வயதினில் அறிமுகமாகும் நட்பால்
புரியா அகங்களில் பொங்கியெழும் மகிழ்ச்சி !
கள்ளமிலா கரங்கள் இணைந்திடும் நட்பால்
உள்ளத்தில் பெருகிடும் இன்பத்தின் வெள்ளம் !
மழலையர் மனதில் பதிந்திடும் எண்ணம்
மறையாது விரைவில் என்பதும் திண்ணம் !
மடிந்திடும் மனிதனின் முடிந்திடும் வாழ்வில்
மணந்திடும் பருவம் மழலை காலம்தானே !
புதுமைகள் தோன்றுது பதுமைகளை கணடதும்
புத்துணர்வு பிறக்குது நாம் புதுயுகம் படைத்திட !
நட்பின் ஆழத்தை விரிவாய் விளக்குகிறது
நமக்கும் உரைக்கிறது பாடமாய் இப்படம் !
நட்பின் அருமையை அழகுற நவில்கிறது
நானிலம் செழிக்க செய்தியினை சொல்கிறது !
நாமும் பரப்பிடுவோம் பாரினில் இதனை
நலமாய் வாழ்ந்திட நம்மால் முடிந்ததை !
நட்பின் பயனை உணர்ந்தோர் அறிவார்
நட்பே உதவிடும் உலகிலே எவருக்கும் !
நட்பே தொடரும் நிழலாய் நமைஎன்றும்
நட்போடு இருப்போம் காலமும் காப்போம் !
பழனி குமார்