ஏற்றமிகு வாழ்வினி நமக்கில்லை
மனிதத்தை மதியாதவர் இருக்கும்வரை
மதவாதப் பித்தருக்கும் மதிப்பிருக்கும்
இனவாதம் பேசுகின்ற மூடர்க்கும்தான்
இன்பமான வாழ்வுக்கு இடமிருக்கும்!
அன்பினிலே தழைத்திடுமே இவ்வையம்
ஆன்றோர் மொழிந்திட்டார் அந்நாளே!
பண்பிலே சிறந்தவர்க்குப் பதவியெனும்
பேராண்மை நிலைப்பதுவும் எந்நாளோ!
வில்லினின்று புறப்பட்ட தீயம்பு
விருட்சத்தை வீழ்த்திச் சாய்த்ததுவே
பொல்லாதவர் விரித்த வலையினிலே
நல்லறம்தான் மாய்ந்து போனதுவே!
கல்லாரும் கயவரும் வாழ்த்துரைக்கப்
புல்லருக்குப் புகழ்மாலை சேர்ந்ததிங்கே
நல்லார் வாழ்வினி நலம்பெறுமோ?
நச்சரவங்கள் சூழ்ந்த பொழுதினிலே!
பல்லறங்கள் ஓங்கிய திருநாட்டில்
பாவங்கள் பல்கிப் பெருகிடுமே
சொல்லில் புலம்பி ஆவதென்ன!
ஏற்றமிகு வாழ்வினி நமக்கில்லை!.