விற்று விடு

எனையன்றி
உன்னை யாரறிவார் ?

என்னை உன்னால்
புரிந்து கொள்ள முடியாது
ஏனெனில்
நீ
மூளையால் என்னை
பார்க்கிறாய் -
நானோ
மனதால் உன்னைக்
காண்கிறேன் !

உன்
மனக் கண்ணாடியை
மறைத்து விட்டு
முகக் கண்ணாடியில்
என் மனம் பார்க்கிறாய் !

நீ
வாழ்க்கையை கணிதத்தில்
வாழப் பார்க்கிறாய் -
நான் வாழ்க்கையை
வண்ணத்துப்பூச்சியில்
வாசிக்கப் பார்க்கிறேன்!

தவறான புரிதலில்
அரவ நா நீட்டி
உன் சொல்லம்புகளில்
விஷம் தோய்த்து
எனதிதயம் துளைக்கிறாய்
தெறித்து விழுகிற
குருதித் துளிகளனைத்திலும்
நீயே
முளைத்துக் கிடப்பதறியாது !

எனதிதயம் முழுவதும்
உன் சொல் சுட்ட
புண் துவாரம்
ஆயினும்
உன் நேசப் புன்னாகவராளி
பாடுகிறது
நீ
தூக்கியெறிந்த
இந்தப் புல்லாங்குழல் !

காதலென்பது
சுரப்பது
கறப்பதல்ல
இதயத்தின் காம்புகளில்
நீயென் காதலென
சுரந்தாய் -
நானோ உனைக்
கறந்தேன் !

வீட்டைச் சுற்றி
நீரோடையிருந்தும்
தாகம் வந்த போது
வானம் பார்த்தேயிருந்தேன்
உன் பொழிதலை
நோக்கி -
நீ
அமில மழையென
என திதயம்
அரித்தெரித்தாய் !

தாய்ப்பாலுக்காக
ஏங்கிய
குழந்தை போல
உன் காதலுக்காக
ஏங்கினேன்
நீயோ
அருகழைத்து
உன் மார்திறந்து
கள்ளிப்பாலூட்டினாய் !

நான் காதலுக்காக
காதலியை
காதலித்தவனில்லை-
காதலிக்காக
காதலைக் காதலித்தவன் !

உன் ஆன்மாவின்
முத்தம்
நான்
கைப்பற்றியதாயுணர்ந்த
கர்வத்தில்
கட்டளையிடுகிறேன் -
என்னை விற்று
உன்னால்
நிம்மதி வாங்க முடியுமெனில்
உன் கிளையின்
ஒற்றைக் குயிலென்னை
அதோ
காத்திருக்கிற கசாப்புக் கடைகள்
ஏதாவதொன்றில்
விற்று விட்டுப் போ .

எழுதியவர் : பாலா (10-Jun-14, 3:22 pm)
பார்வை : 144

மேலே