முதுசம்
![](https://eluthu.com/images/loading.gif)
நீயுன் சாவை அழைத்தபடி
எங்கள் ஒப்பாரிக்கு நீளம் சேர்க்கும்
இந்த விடியலை முதலில் தீயிலடவேண்டும்
தூக்க மாத்திரைகளை நினைவில் இருந்து
தூர வீசியெறி
மரணத்தை மாத்திரை புள்ளியிடும்
வாழ்வின் முற்றங்களை உழுது தள்ளு
நீ
அன்பின் முதுசமாய்
அலைபாயும் மழலைக் கடல்
உந்தன் ஆழம் யாரால் அளவிட முடியும்
உன் கவிதைகளை சுவர்களில்
தொங்கவிடு
அது காற்றை வருடி
அன்பறியா அகிலம் யாவும் படரட்டும்
அழுவதிலும் அடம்பிடிப்பிலும்
இயலாத குழந்தையாகவிருந்து
தனிமையின் இரவுகளை
தாளமிட்டு ரசி
உன் படுக்கையறையில் குளிர் பொதிந்த
கனவுகளை முட்டையிட்டு
அடை காத்துக் கொள்
இப்பொழுதும் உன்னருகில்
பல்லாண்டு கால உறைதலோடு
தற்கொலையிருக்குமாயின்
வசீகராமான
உன் விரல் நகங்களால்
அதன் குரல் வளையை
கீறிக் கொல்
எங்கிருக்கிறது தற்கொலையின் ஆதிமயிர்.