விருப்புகளுக்கு மாறுபட்ட இருப்பு

விருப்பு என்னவோ நெடு மரங்கள் கோட்டையாய்,
இருப்பு என்னவோ நெடுஞ் சுவர்கள் கோட்டையாய் !

விருப்பு என்னவோ மர இலை அசைவில் குளிர் காற்று ,
இருப்பு என்னவோ சாதன பேட்டியின் இலை அசைவில் குளிர் காற்று!,

விருப்பு என்னவோ சாவகாசமாய் பேச நமக்கென தனி உபரிகை,
இருப்பு என்னவோ பல மனைகளுக்கு பொதுவாய் ஒரு உபரிகை!

விருப்பு என்னவோ மனையின் கொல்லை புறத்தில் ஒரு தோட்டம் ,
இருப்பு என்னவோ கண்ணுக்கெட்டிய தொலைவில் எங்கும் இல்லை தனி தோட்டம்!

விருப்பு என்னவோ தாவர பூங்கா பல ,
இருப்பு என்னவோ தகவல் தொழில்நுட்ப பூங்கா பல !

விருப்பு என்னவோ பட்சிகள் பல விருந்தினராய் வீட்டிற்கு தினம்,
இருப்பு என்னவோ கூண்டு கைதியாய் அவை , அக்கம் பக்கம் !

விருப்பு என்னவோ இயற்கையின் இசையில் காலை எழுச்சி,
இருப்பு என்னவோ அலைபேசியின் அலாரத்தில் கண் மலர்ச்சி!

விருப்பு என்னவோ இரு புற மர கூரையில் சாலை பயணம்,
இருப்பு என்னவோ மேம்பாலங்களின் கூரையில் சாலை பயணம்!

விருப்பு என்னவோ அழகாய் ஒரு சீர் ஓட்டம் தினமும் .. ஆரவாரமற்ற சாலையில்,
இருப்பு என்னவோ முடிவில்லா ஓட்டம் நெருசல்களின் நடுவில் !

இப்படி அடுக்கி கொண்டே போக ….

இருப்புகள் எல்லாம் விருப்புகளுக்கு மாறுபட்டிருந்தும்,
விருப்பின் உச்சமாய் எங்கும் செல்லும் செல்வமாய் போனதால் ,
தொலைந்தேனே நானும் அது செல்லும் வழியே !

எழுதியவர் : மகா !!! (17-Jun-14, 9:19 pm)
பார்வை : 79

மேலே