செந்தமிழ்ச் செம்மொழி, எம்மொழியாம்

குமிழ்கலசம் விரிக்கலயம் எல்லாமும் தேடி,
அமிழ்தெங்கே...அமிழ்தெங்கே...வினவுகின்றீர் - எங்கள்
‘தமிழெ’ன்ற சொல்லொன்றே அமிழ்து காண்பீர்!
இரண்டாறுயிரும்,
மூன்றாறு மெய்யும்,
உடன்கூடி உருவான சதமிரண்டும்,
தசமோடாறும், ஆயுதமொன்றுமாய்
ஆதியிலுதித்த அருமை மொழி - எங்கள்
செந்தமிழுணர்வீரே!!
சந்தையில் வாங்கும் சரக்கல்ல - இதன்
விந்தையுரைப்பேன் சிந்தையில் கொள்வீர்!
எந்தை ஈசனின் நுதல்விழித் தீப்பொறியில்,
பொய்கைக் கஞ்சத்தின் மேலுதித்த
எழில்கொஞ்சும் குகனெங்கள்
தமிழுக்குத் தலைவன்!
குமிழ்மேகம் முகம்மோதும்,
பொதிகைமடி வரமேகும்,
முதிர் ஞானக் குறுமூர்த்தக் குருசீலன்,
தமிழுக்குத் துணைவன்!
வரிவண்டு நடமாடும்
நறுங்கூந்தல் அசைந்தாட,
கருங்கண்டன் மனையாள்
கயல்விழியாள்நகர் திரிசங்கவேந்தர் - நற்
தமிழ்ச் சேவகராமே!
இலக்கியங்கள் இதில் நயமுடன் தோன்றின - நல்
இலக்கணங்கள் நறுமலரெனச் சொரிந்தன
பல்சுவைப் பதிகம் பதமாய் மிளிர்ந்தன
பண்பினை வளர்த்ததென் பழந்தமிழ் மொழியே!
தொல்காப்பியமென் தமிழினை உரைத்தது
கணக்கு நூல்கள் நல்லறம் தந்தன
நீதி நூல்கள் வாழ்தலைச் செப்பின
காப்பியங்கள் கனிந்ததை விளக்கின
திருமுறை பிரபந்தம் தெய்வம் போற்றின
சாத்திரமெல்லாம் சத்தியம் நவின்றன
வள்ளுவராதி வல்லுனரெல்லாம்
வாழ்வின் வழியதை வலிந்து நவின்றனர்!
பொன்பொருளெல்லாம் புறத்தே போக
பொலிவுற்றிலங்கும் செந்தமிழ் மொழியை
வந்தனம் கூறி வாய்வழியுரைப்பீர்
உணர்வீர் அதுவே நல்லதோர் அமுதாம்!


***************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (20-Jun-14, 10:31 am)
பார்வை : 2772

மேலே