நண்பர்களே ஒரு நிமிடம்

செய்தியொன்று சொல்கிறேன் செவி கொடுங்கள் நண்பர்களே...

இனிப்பை விட இனிமையான செய்தியது...

கனவுகள் கண்டதுண்டு நான் , என் கனவுகள் அத்தனையும் நனவாவது போல்...

இமயமலையின் உச்சியை உற்று நோக்கிக் கொண்டு இருக்கும் ஒரு சிற்றெரும்பைப் போல் , சென்றடைய ஆசைப்படும் உயரங்களை , முதல் படியில் நின்று கொண்டு அண்ணார்ந்து பார்த்து , சில நேரம் வியந்து கொண்டும் பல நேரங்களில் பயந்து கொண்டும் இருக்கும் சிறு பிள்ளை நான்...

அடுத்த நிமிடத்தில் , வாழ்க்கை என்ன ஒரு ஆச்சரியத்தைத் தன்னுள் ஒளித்து வைத்து இருக்கிறது என்று அறிந்து இருக்காத ஒரு ஞாயிறு மாலையில் , ஒரு பூங்காவின் அருகில் குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்...

ஏதோ ஒரு நினைவு உந்தித்தள்ள , என் அலைபேசியில் எழுத்துத் தளம் திறந்தேன்...

மின்னஞ்சல்(1) என்று இருந்தது...

அதைத் திறந்து படித்த போது உணர்ந்தேன் , கடவுள் நேரில் வரமாட்டார் நம் கனவுகளை நனவாக்க , ஆனால் , ஏதோ ஒரு நாளில் எங்கிருந்தேனும் மனித உருவில் வருவார் நம்மை வழிநடத்த என்று நான் உணர்ந்து கொண்ட நொடி அது...

அந்த நொடி கொடுத்த ஆச்சரியத்தில் இருந்து , இன்று வரை நான் மீளவில்லை...

அந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பி இருந்தவர் கவிஞர் திரு.கவித்தாசபாபதி ஐயா அவர்கள்...

அவர் அனுப்பி இருந்த மின்னஞ்சலின் ஒரு பகுதி இங்கு...



*******உங்கள் இரவுச் சூரியன் அலாதியானது.
உங்கள் மனதின் விரல்கள் வாசகனை மீட்டுகிறது.
*
*
*
*
*
உங்கள் இரவுச் சூரியனை தொகுப்பில் இணைக்க விரும்புகிறேன். நல்ல படைப்பு அது.********



என்று இருந்தது அந்தச் செய்தி...இன்று வரையில் , நம்ப முடியாத ஒரு மகிழ்ச்சி அது...


திரு.கவித்தாசபாபதி ஐயா அவர்களால் வரும் ஜூலை மாதம் உயிர் பெரும் அந்த அழகிய கவிதைத் தொகுப்பு ,


**இவர்களால் சிலிர்க்கும் இயற்கை**


"முன்னோடிக் கவிகளின்
விருட்ஷங்கள் கொண்டு
ஒரு வனம் அமைக்கிறேன்,
சந்ததியருக்காக..........!"



என்று தொடங்கும் அந்த அரிய நூல் ,


42 ஆண்டுகளில் வெளியான இயற்கை சார்ந்த வாழ்வியல், மனவியல் கவிதைகளில் அற்புதமான சிலவற்றின் தொகுப்பாகும்...

இதில் ஈழக்கவிகள், நவீன விருட்சம் கவிகள், முன்னோடி கவிஞர்கள் கவியரசு நா.காமராசன்,சிற்பி, அப்நுல் ரகுமான், மு.மேத்தா, வைரமுத்து, இன்குலாப், கேரளக் கவியரசர் கே.சச்சிதானந்தன் போன்றோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.


கவிதைக் கடவுள்களுக்கு மத்தியில் , சிறுபிள்ளையான எனது இரண்டு கவிதைகள்....

கனவா , இல்லை இது நிஜம் தானா...

எனது அந்த இரண்டு கவிதைகள்,


*இரவுச்சூரியன்*

*நிலாப் பொழுதுகள்*

ஆகியவையாகும்...


சட்டென்று தோன்றி மறையும் மின்னலாய் என் நாளொன்றில் தோன்றி , *இரவுச்சூரியன்* என்ற தலைப்பை எனக்குக் கொடுத்து , இந்தத் தலைப்பின் கீழ் ஒரு கவிதை எழுது என்று சொல்லிச் சென்ற திரு.லம்பாடி பாலா சார் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...என் சிறிய வட்டத்தைத் தாண்டி என்னால் சிந்திக்க முடியும் என்று நான் அறிந்து கொண்டது இந்தக் கவிதையினால் தான்...

திரு.கவித்தாசபாபதி ஐயா அவர்கள் கொடுத்த தன்னம்பிக்கை வார்த்தைகளால் உருவான கவிதையே *நிலாப் பொழுதுகள்*...

என் மீது எனக்கே நம்பிக்கை வரத் தொடங்கியது ஐயாவினுடைய தன்னம்பிக்கை வார்த்தைகளால் தான்...

ஜூலை மாத இறுதியில் வெளிவர இருக்கும் அந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி , அத்தனை பெரிய கவிஞர்களின் கவிதைகளுக்கு இடையில் எனது இரண்டு கவிதைகளைக் காணும் போது எனது இதயத் துடிப்பு இரண்டு மடங்காகத் துடிக்கப் போகும் அந்த ஒரு தருணத்திற்காக , கைகள் நடுங்க காத்திருக்கிறேன் , இன்றே ஜூலை இறுதி வந்து விடாதாவென்று...

எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை அடையாளம் கண்டு கொண்ட ஐயா அவர்களுக்கு "நன்றி" என்ற ஒற்றைச் சொல் போதவே போதாது...

என் கண்ணீர்த் துளிகளின் மூலம் மட்டுமே , என்னால் அவருக்கு என் நன்றிகளைச் சொல்ல முடியும்...

ஐயா ,

தங்களுக்கு என் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்...


இவை அத்தனைக்கும் அடிப்படைக் காரணமாய் இருந்து , பல சாதனைகளையும் வரலாறுகளையும் உருவாக்கிக் கொண்டு இருக்கும் *எழுத்து* தளக் குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!!




- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (20-Jun-14, 4:11 pm)
பார்வை : 433

மேலே