முகில்களின் வழியே
அலுவலகத்தின்
கண்ணாடி ஜன்னல்
வழியே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மேகங்களின்
இடப்பெயர்வை;
பள்ளி செல்வதற்காய்
சைக்கிளில் செல்லும் போது
கல்லும் மண்ணுமாய்
இருந்த பாதையில்
சைக்கிளை தள்ளிக்கொண்டு
நடந்து வருகையில்
கதிரேசன் உடனான
உரையாடல்கள்
தனியே
ஒரு வெள்ளை முகிலில்
கடந்து போவதை
காண முடிந்தது;
அவ்வளவு பெரிய வானத்திலும்
இளைப்பாற நின்ற
பெரிய புளியமரத்தின்
கீழே உதிர்ந்து கிடந்த
புளியங்காய் முகில் சில்லில்
கூசிப்போனது பற்கள்;
கொஞ்சம் பிற்பாடு
அலைஅலையாய்
தொடர்ந்து வந்த
முகில்கள் எல்லாம்
எழுப்பிய பெரும் சத்தத்தில்
எங்கள் ஊரிலிருந்து
எட்டு மணிக்கு கிளம்பும்
கே 5 பேருந்தின்
பச்சை வண்ணமும்
கத்தி கத்தியே
குரல் வற்றிப்போன
கண்டக்டர் நடராஜன் அண்ணாவும்
கடந்து போய்கொண்டிருகின்றனர்
கடைசியாய் போகும்
ஒரு மேகமுகிலில் ;
எல்லாமும்
தனியே
எந்த ஒரு
சலனமும் இல்லாமல்
நகர்ந்துகொண்டே
தான் இருக்கிறது.
அமர்ந்திருக்கும் நாற்காலியின்
கீழிருக்கும்
சுழல் சக்கரம் போல
இங்கிருந்து நானும்
ஜன்னல்வழி
மேகங்களும்
தொடர்கின்றன
அலைவரிசைகளற்ற
பிரயாணங்களை..