எதை சேமிப்பது

நானே செலவழிந்தபின்
எதை சேமிப்பது ?
சிறுகச் சிறுக
என்னைச் செலவழித்தவர்கள்
வரவுகளை எடுத்துக் கொண்டு
செலவுகளில் என்னைக் கழித்து
மீதி எதுவுமின்றி
ஈவுகளால்
என்னை வகுக்கிற போது
எதைச் சேமிப்பது நான் ?
தவணை முறையில்
என்னைச் செலவழித்தவர்கள்
செலாவணிகளின்
வரவு செலவுக்
கணக்குகளை -
குயுக்தியுடன் குத்தகைதாரர்களென
கணக்கெழுதிக் கொண்டிருக்கையில்
நான் எதைச் சேமிப்பது ?
என்னைச் சுற்றியுள்ளவர்கள்
அவர்களுக்கென
என்னைச் செலவழிக்கையில்
நான் என்றோ சேமித்த
எனது உண்டியல்கள்
முழுவதும்
செல்லாக் காசெனும் போது
நான்
எதைச் சேமிப்பது ?