தெரு ஓவியன்
விதித் துடைப்பத்தால்
வீதியைப் பெருக்கி
கண் "நீர் " தெளித்து
வறுமையின்
வண்ணப்பொடிகளால்
வரையத் தொடங்குகிறான்
கடவுளின் ஓவியத்தை !
உயிர் கொடுத்த
கடவுளர்களுக்கு
உயிர் கொடுக்கிறான்
கண்களில் வண்ணம் தீட்டி
கருவிழி முடிக்கையிலிந்த
ஏழை பிரம்மன் -
ஆயினும்
இவன் வறுமையின்
கண் திறக்க முடியாமல்
திணறுகிற கடவுள்
சங்கு , சக்கரத்துடன்
விஷ்வரூபமெடுத்து
வீதியில் அருள் பாலிக்கிறார் !
வெறும் தரையில்
விதைக்கப் பட்டிருக்கும்
ஓவியக் கலையின் மீது
தத்ரூபத்தின் விலை
ரசனையாக மாறி
சில்லறைகளாக
வீசியெறியப்படுகின்றன !
கட்டாந்தரையின்
கொளுத்தும் வெயிலில்
குளிர் நீரோடையையும்
அசைந்தாடும் மரங்களையும்
சிறகடிக்கும் பறவைகளையும்
விரல்களால் பறக்க விடும்
சாலையோர கலைஞனின்
கலாசாலையின் அடுக்குகளில்
கற்பனை மயிற்பீலிகள்
ஏராளமாய் செருகப்பட்டிருந்தாலும்
பெரும்பாலும்
அவனடுப்புகளில்
பூனைகளே
அதிகம் உறங்குகின்றன !
வந்து விழும்
பாராட்டை விட
தெறித்து விழும்
சில்லறையின்
சங்கீதத்தில்
உயிர்த்தெழுகிறது
இந்தத் தெருவோர
ரவிவர்மாவின்
சாக்பீஸ் தூரிகை !
ஒரு நாள்
கோவர்த்தனகிரி
குடை பிடித்த கிருஷ்ணணனை
இவன் வரைந்து கொண்டிருந்த போது -
திடீரென பெய்த
எதிர்பாரா மழையினால்
நனைந்து அழிந்து கொண்டிருந்த
கிருஷ்ணனைப் பாதுகாக்க
குடையுடன் ஓடி வந்து
ஓவியத்தின் மீது
பிடித்து நின்ற
பள்ளிச் சிறுமியின்
ரசனைக்கு ஈடாக
எத்தனை பொற்காசுகளை
நாம்
விட்டெறிந்து விடமுடியும் ?