பெண்ணானவள்

பெண்ணை நிலவென்றாய்
ஓராயிரம் நிலாக்கள்
உடைத்து வீசப்பட்டன
இம்மானுட வெளியில்

உயிரை உருக்கி
சொட்டுச் சொட்டாய்
செங்குருதி வடித்து
நிற்கின்றன பூக்கள்

பெண் மலரென்றவன்
அறியட்டும் இது
கசங்கிய பெண்மையின்
கடைசி சொட்டு
ஜீவன் என்று

தெய்வாம்சம் கொண்டது
பெண்ணினமாம்
தெருவில் நடக்க
தனிப் பாதுகாப்பு
படை வேண்டும்

நிலவே மலரே
அழகே என்றாய்
பெண்ணைப் பெண்
என்றவருண்டோ

இனம் தழைக்க
உறவாடுவது விலங்குகள்
என்றால் வன்புணர்வு
கொள்ளும் இவர்களுக்கும்
பெயருண்டோ

பகுத்தறிய முடியாத
பாவிகளுக்கு நாகரீகப்
போர்வை எதற்கு

மாசற்ற ஒளி கொண்டவள்
ஒளி சுருக்கித்
தன்னை மறைக்கும்
நிலை வந்துவிடுமோ

ஆழிக் கடல்
அடங்கிவிடுமா
நத்தை கூட்டிற்குள்

தன்னைச் சுற்றிய
இருள் விலக்க
கையில் தீபமேந்தி
விழித்துக் கொண்டிருக்கின்றன
இளஞ்சூரியன்கள் !!

எழுதியவர் : கார்த்திகா AK (25-Jun-14, 6:49 pm)
பார்வை : 488

மேலே